Published : 29 Jun 2025 06:33 AM
Last Updated : 29 Jun 2025 06:33 AM
ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்கப்பட்டு, 19 விமானங்களில் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் போரை தொடர்ந்து அந்த நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூன் 18-ம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஈரானில் இருந்து 3,597 பேரும் இஸ்ரேலில் இருந்து 818 பேரும் மீட்கப்பட்டனர். இவர்கள் 19 சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
இவர்களில் 14 பேர் வெளிநாடு இந்தியர்கள். மேலும் 9 பேர் நேபாளத்தையும் 4 பேர் இலங்கையையும் சேர்ந்தவர்கள். இதுதவிர இந்தியர் ஒருவரின் ஈரானிய மனைவியும் அழைத்து வரப்பட்டார். மீட்கப்பட்ட இந்தியர்களில் 1,500-க்கும் மேற்பட்ட பெண்களும் 500 குழந்தைகளும் அடங்குவர்.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஜூன் 20-ம் தேதி ஈரான் வான்வெளியை பயன்படுத்த அந்நாடு அனுமதி அளித்ததை தொடர்ந்து, பெரும்பாலான இந்தியர்கள் ஈரானின் மஷாத் நகரில் இருந்து அழைத்து வரப்பட்டனர். மேலும் ஈரானில் இருந்து இந்தியர்கள் ஆர்மீனியா மற்றும் துர்க்மெனிஸ்தான் அழைத்துவரப்பட்டு பிறகு அங்கிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையை டெஹ்ரான், யெரவன், அஷ்காபாத் ஆகிய நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைத்தன.
இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி ஜூன் 23-ல் தொடங்கியது. இவர்கள் ஜோர்டான் மற்றும் எகிப்து அழைத்து வரப்பட்டு பிறகு அங்கிருந்து மீட்கப்பட்டனர். மீட்புப் பணிகளை டெல் அவிவ், ரமல்லா, அம்மான், கெய்ரோ ஆகிய நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைத்தன.
வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் இந்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்து இதனை மீண்டும் நிரூபித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் உதவிய ஈரான், இஸ்ரேல், ஜோர்டான், எகிப்து, ஆர்மீனியா மறறும் துர்க்மெனிஸ்தான் அரசுகளுக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT