Published : 29 Jun 2025 06:31 AM
Last Updated : 29 Jun 2025 06:31 AM
இந்திய உளவுத் துறையான ரா அமைப்பின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே போர் நடைபெற்றது. இதன்பிறகு 1965-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. இந்த இரு போர்களின்போது கிடைத்த அனுபவங்கள் காரணமாக கடந்த 1968-ம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு தொடங்கப்பட்டது. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பு இந்தியாவின் உயர் உளவு பிரிவு ஆகும்.
ரா அமைப்பின் முதல் தலைவராக கே.என்.ராவ் பணியாற்றினார். 1968-ம் ஆண்டு முதல் 1977 வரை அவர் பதவியில் நீடித்தார். இதன்பிறகு பலரும் ரா அமைப்பின் தலைவராக பதவி வகித்துள்ளனர். பெரும்பாலும் ஐபிஎஸ் அதிகாரிகள், முப்படைகளின் மூத்த அதிகாரிகள் ரா தலைவர்களாக பதவியேற்பது வழக்கம்.
கடந்த 1971-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர், கடந்த 1975-ம் ஆண்டில் இந்தியாவுடன் சிக்கிம் இணைக்கப்பட்டது, காலிஸ்தான் தீவிரவாத பிரச்சினை, பாலகோட் துல்லிய தாக்குதல் உட்பட பல்வேறு காலக்கட்டங்களில் ரா மிக முக்கிய பங்காற்றி உள்ளது.
ரா அமைப்பின் தற்போதைய தலைவர் ரவி சின்ஹா நாளை ஓய்வு பெறுவதால் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். பஞ்சாப் மாநில ஐபிஎஸ் அதிகாரியான இவர் மிக நீண்ட காலமாக ரா அமைப்பில் பணியாற்றி வருகிறார். தற்போது ரா -வின் வான்பரப்பு ஆய்வு மையத்தின் தலைவராக உள்ளார்.
கடந்த மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த முகாம்களை அடையாளம் கண்டு, அவற்றை அழித்ததில் பராக் ஜெயின் முக்கிய பங்கு வகித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அப்போது காஷ்மீர் விவகாரத்தை பராக் ஜெயின் கையாண்டார். காஷ்மீரில் வன்முறையைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டியதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். கடந்த 2019-ம் ஆண்டில் பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தன. இந்த துல்லிய தாக்குதலின்போதும் பராக் ஜெயின் மிக முக்கிய பங்கு வகித்தார். ஜூலை 1-ம் தேதி ரா அமைப்பின் தலைவராக அவர் பதவியேற்க உள்ளார். இரண்டு ஆண்டுகள் அவர் பதவியில் நீடிப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT