Published : 29 Jun 2025 06:28 AM
Last Updated : 29 Jun 2025 06:28 AM
செல்போன் மூலம் அவசரகால எச்சரிக்கை விடுக்கும் நடைமுறையை நாடு முழுவதும் தொலை தொடர்புத்துறை நேற்று பரிசோதித்தது.
ஆன்ட்ராய்ட் செல்போன் மற்றும் ஐ-போன்களில் செல் ஒலிபரப்பு மூலம் பொதுமக்களுக்கு அவசரகால எச்சரிக்கை தகவலை அனுப்பும் பரிசோதனையை தொலை தொடர்புத்துறை நாடுமுழுவதும் நேற்று மேற்கொண்டது. இது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மையில் முக்கிய பங்காற்றுகிறது.
இத்தகவலில், ‘எச்சரிக்கை பரிசோதன. செல் ஒலிபரப்பு பரிசோதனை, இத்தகவலை பெறுபவர்கள் எதுவும் செய்ய வேண்டாம்’’ என்ற தகவலுடன் இந்த பரிசோதனை நடைபெற்றது. செல் ஒலிபரப்பு தொழில்நுட்பம் மூலம், மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை மேற்கொண்ட அவசர கால ஒலிபரப்பு பரிசோதனை பலரை ஆச்சர்யப்படுத்தியது.
செல் ஒலிபரப்பு எச்சரிக்கையின் முக்கிய நோக்கம் அவசரகாலத்தில் மக்களுக்கு குறித்த நேரத்தில் எச்சரிக்கை விடுப்பதுதான். அவசரநிலை குறித்த முக்கிய தகவல் விரைவாக பரவும்போது பலரது உயிர்களை காக்க உதவுகிறது.
பூகம்பம், வெள்ளம், சுனாமி மற்றும் இதர பேரிடர் சமயத்தில் இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த பரிசோதனை தகவலை பெற விரும்பாதவர்கள் தங்கள் செல்போன் செட்டிங்கில் ‘செக்யூரிட்டி அண்ட் எமர்ஜென்சி’ என்பதை தேர்வு செய்து வயர்லெஸ் எமர்ஜென்சி அலர்ட் என்ற உட்பிரிவில் உள்ள பரிசோதனை எச்சரிக்கையை ஆப் செய்ய வேண்டும்.
செல் ஒலிபரப்பு மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து நெட்வொர்க் செல்போன்களுக்கும் உடனடியாக அவசர தகவலை அனுப்ப முடியும். செல் ஒலிபரப்பு மூலம் சரியான நேரத்தில் அவசர தகவல் தெரிவிப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு பாதுகாப்பாக இருக்கு முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT