Published : 29 Jun 2025 06:25 AM
Last Updated : 29 Jun 2025 06:25 AM
நாட்டில் முதல்முறையாக அயோத்தி ராமர் கோயிலில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளது.
இதுகுறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா நேற்று கூறியதாவது: நாட்டிலேயே முதல் முறையாக அயோத்தி ராமர் கோயிலில் ஜன்னல் கிரில்கள் டைட்டானியம் உலோகத்தால் பொருத்தப்பட உள்ளன. இது தனித்துவமானது. ஏனென்றால் இந்த உலோகம் மிக நீண்ட ஆயுட்காலம் கொண்டது. அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் கொண்டது. மேலும் மற்ற உலோகங்களுடன் ஒப்பிடுகையில் டைட்டானியம் வலிமையானது மற்றும் இலகுவானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ராமர் கோயிலுக்காக பன்சி பஹர்பூரில் இருந்து சுமார் 14 லட்சம் கன அடி கற்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதில் எஞ்சிய லட்சம் கன அடி கற்கள் இனி பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கடந்த வாரம் கூறுகையில், “ராமர் கோயில் கட்டுமானப் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது. கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன் அனைத்து கனரக இயந்திரங்களும் அங்கிருந்து அகற்றப்படும். கோயிலின் முக்கியப் பணி அக்டோபரில் முடிவடையும். சுற்றுச்சுவர், கலையரங்கம், கழிப்பறைகள், அறக்கட்டளை அலுவலம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் முடிய இன்னும் ஓராண்டு ஆகும்" என்றார்.
2019-ல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியது. இக்கோயில் கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி பொதுமக்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT