Published : 29 Jun 2025 01:22 AM
Last Updated : 29 Jun 2025 01:22 AM
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இதில் பயிலும் மாணவி கடந்த 25-ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவி கஸ்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், ‘‘தேர்வு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக கல்லூரி ஊழியர் மனோஜித் மிஸ்ராவை சந்தித்தேன். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் என்னிடம் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்தேன்.
பின்னர், 2 மாணவர்களை அழைத்து என்னை பாதுகாவலர் அறைக்கு கூட்டிச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக அங்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பாதுகாவலரை வெளியே இருக்குமாறு கூறிவிட்டு என்னை வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவத்தை தடுக்க பாதுகாவலர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை’’ என கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜைப் அகமது (19) பிரமித் முகர்ஜி (20) ஆகிய இரு மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர் மனோஜித் மிஸ்ரா (30) ஆகிய 3 பேர் கடந்த 26-ம் தேதி கைது செய்யப்பட்டனர். கல்லூரியின் பாதுகாவலர் பினாகி பானர்ஜியை போலீஸார் நேற்று கைது செய்தனர். இத்துடன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலியல் வன்கொடுமையை தடுக்காதது ஏன் என்ற கேள்விக்கு பினாகி பானர்ஜி முரண்பட்ட பதில் அளிக்கிறார். யாருடைய அறிவுறுத்தலின் பேரில் அவர் தனது அறையை விட்டு வெளியேறினார் என்பதற்கும் அவர் பதில் அளிக்க வேண்டும்’’ என்றார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு கண்காணிப்பு பிரிவின் (எஸ்எஸ்டி) ஏசிபி பிரதிப் குமார் கோஷல் கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுகலை பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்து 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், கொல்கத்தாவில் மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT