Published : 29 Jun 2025 01:15 AM
Last Updated : 29 Jun 2025 01:15 AM

பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்கரவர்த்தி' பட்டம்: ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விழாவில் கவுரவம்

ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விவாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 'தர்ம சக்கரவர்த்தி' பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஜெயின் துறவி ஆச்சார்ய வித்யானந்த் மஹராஜ் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஷெட்பல் கிராமத்தில் கடந்த 1925-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பிறந்தார். நவீன இந்தியாவின் புகழ்பெற்ற ஜெயின் துறவிகளில் ஒருவராக விளங்கினார். ஜைன மத கொடி மற்றும் சின்ன வடிவமைப்பில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.

இந்நிலையில், வித்யானந்தின் நூற்றாண்டு (பிறந்த நாள்) விழா அடுத்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி வரை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய கலாச்சார அமைச்சகமும் பகவான் மகாவீரர் அகிம்சா பாரதி அறக்கட்டளையும் இணைந்து செய்துள்ளன. இதையொட்டி நாடு முழுவதும் கல்வி, கலாச்சார மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 'தர்ம சக்கரவர்த்தி' பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தர்ம சக்கரவர்த்தி பட்டத்தை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: இன்று இந்தியாவின் ஆன்மிக மரபில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வை நாம் அனைவரும் காண்கிறோம். ஆச்சார்ய வித்யானந்த் மஹராஜின் நூற்றாண்டு விழா அவருடைய எண்ணற்ற சீடர்களின் பக்தியால் நிரம்பி உள்ளது. இது நம் அனைவருக்கும் உண்மையிலேயே ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டத்தை வழங்கி கவுரவித்திருக்கிறீர்கள். இதற்கு தகுதியானவன் என்று நான் கருதவில்லை. ஆனால், துறவிகளிடமிருந்து எதைப் பெற்றாலும் அதை பிரசாதமாக ஏற்றுக் கொள்வது நமது கலாச்சாரம். எனவே, நான் இந்த பிரசாதத்தை பணிவுடன் ஏற்றுக் கொண்டு அதை பாரத மாதாவுக்கு அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'ஆச்சார்யா ஸ்ரீ 108-வது வித்யானந்த்ஜி மஹராஜின் வாழ்க்கை மற்றும் மரபு' என்ற தலைப்பில் நடைபெறும் கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதில் அவரின் பங்களிப்புகளை விவரிக்கும் சுவரோவியங்கள், ஓவியங்கள் மற்றும் அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் ராஷ்ட்ரசன்ட் பரம்பராச்சார்யா பிரக்யாசாகர் முனிராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜெயின் துறவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x