Published : 29 Jun 2025 12:06 AM
Last Updated : 29 Jun 2025 12:06 AM

‘விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்க்கும்போது...’ - பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று செயற்கைக்கோள் தொலைதொடர்பு வசதி மூலமாக கலந்துரையாடினார். படம்: பிடிஐ

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.

கடந்த 25-ம் தேதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா சென்றார். அங்கு அவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடிநேற்று அவருடன் செயற்கைக்கோள் தொலை தொடர்பு வசதி மூலம் கலந்துரையாடினார். இருவரும் 18 நிமிடங்கள், 25 விநாடிகள் பேசினர். பிரதமர் மோடி - ஷுபன்ஷு சுக்லா இடையே நடைபெற்ற உரையாடல் விவரம்:

பிரதமர் மோடி: தாய் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் இதயம், இந்தியர்களோடு மிக நெருக்கமாக இருக்கிறது. விண்வெளி நிலையத்தில் இந்திய தேசியக் கொடியை நிறுவியதற்காக 140 கோடி இந்தியர்களின் சார்பில் வாழ்த்துகளை கூறுகிறேன். அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறதா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

ஷுபன்ஷு சுக்லா: உங்களுக்கும் 140 கோடி இந்திய மக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பது புதுவித அனுபவமாக இருக்கிறது. இது எனது தனிப்பட்ட பயணம் அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் பயணம். உங்களது சீரிய தலைமையால் இந்தியாவின் கனவுகள் நனவாகி வருகின்றன.

பிரதமர்: பூமியில் இருந்து கேரட் அல்வா கொண்டு சென்றீர்கள். சக வீரர்கள் அல்வா குறித்து என்ன கூறினார்கள்?

சுக்லா: கேரட் அல்வா, பாசிப் பருப்பு அல்வா, மாம்பழச் சாறு ஆகியவற்றை விண்வெளி நிலையத்துக்கு எடுத்து வந்தேன். இவற்றை சகவீரர்கள் அனைவரும் ருசித்து சாப்பிட்டனர். மிகவும் சுவையாக இருந்ததாக அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பிரதமர்: விண்வெளி நிலையத்தில் இருந்தபடி பூமியை சுற்றி வருகிறீர்கள். நீங்கள் தற்போது எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?

சுக்லா: ஒரு நாளில் 16 முறை சூரிய உதயத்தையும், 16 முறை சூரிய அஸ்தமனத்தையும் பார்க்கிறேன். மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பூமியை சுற்றி வருகிறோம்.

பிரதமர்: விண்வெளி நிலையத்தில் இருந்து அண்டவெளியை பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?

சுக்லா: விண்வெளி நிலையத்தில் இருந்து முதலில் பூமியை பார்த்தேன். மேலே இருந்து பார்க்கும்போது பூமிக்கு எந்த எல்லைக் கோடும் இல்லை. இந்தியாவை பார்க்கும்போது அழகாக, அற்புதமாக, மிகவும் பெரிதாக இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை பூமி பிரதிபலிக்கிறது. நாம் பூமியை சேர்ந்தவர்கள். நாம் அனைவரும் ஒன்று என்பதை உணர்கிறேன்.

பிரதமர்: விண்வெளி நிலைய சூழல் எப்படி இருக்கிறது?

சுக்லா: புதிய அனுபவமாக இருக்கிறது. இங்கு ஈர்ப்பு விசை கிடையாது. உங்களோடு பேசும்போதுகூட கால்களை கட்டி வைத்து உள்ளேன். விண்வெளி நிலையத்தில் இருப்பது பறப்பதை போன்ற அனுபவமாக இருக்கிறது. தூங்குவது மட்டும் பெரும் சவாலாக இருக்கிறது. புவிசுற்றுவட்ட பாதையில் சுற்றும்போது இந்தியாவை பார்க்கிறேன். வரைபடத்தில் பார்ப்பதைவிட இங்கிருந்து பார்க்கும்போது இந்தியா மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது.

பிரதமர்: தியானம் பயனுள்ளதாக இருக்கிறதா?

சுக்லா: பூமியில் இருந்து விண்கலத்தில் புறப்பட்டபோதே தியானத்தை கடைபிடிக்க தொடங்கிவிட்டேன். இதன்மூலம் எனது மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்த முடிகிறது. சவாலான நேரங்களில் தியானம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. விண்வெளி நிலையத்தை வந்தடைந்தது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதுகிறேன்.

நமது நாட்டின் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. வானத்தின் எல்லைகளை தாண்டி உள்ளோம். எனக்கு பின்புறத்தில் இந்திய தேசியக் கொடி இருக்கிறது. இதை நேற்றுதான் நிறுவினேன். இது மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பான புகைப்படம், வீடியோவை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x