Last Updated : 28 Jun, 2025 07:07 PM

1  

Published : 28 Jun 2025 07:07 PM
Last Updated : 28 Jun 2025 07:07 PM

“அற்புதம்...” - விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி சிலாகிப்பு

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்தியாவின் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், “குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உடனான உரையாடல் அற்புதமாக இருந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவர் தனது அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டார். அந்தச் சிறப்புக் கலந்துரையாடலை நீங்களும் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த உரையாடலின்போது, “நீங்கள் இந்தியாவில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள்... ஆனால், இந்தியர்களின் மனதில் மிக நெருக்கம் கொண்டுள்ளீர்கள். உங்களின் இந்த வரலாற்றுப் பயணம், விண்வெளி ஆய்வு மாணவர்களின் உத்வேகத்தைக் கூட்டும்” என்று ஷுபன்ஷு சுக்லாவிடம் பிரதமர் மோடி கூறினார்.

அப்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை பார்க்கும்போது உணர்ந்த தருணத்தை பிரதமர் மோடியிடம் விவரித்த ஷுபன்ஷு சுக்லா, “பூமி முழுவதும் எல்லைகள் ஏதுமின்றி ஒன்றாகத் தெரிகிறது. நாம் வரைபடத்தில் பார்ப்பதைக் காட்டிலும் இந்தியா மிகவும் பெரிதாகத் தெரிகிறது” என்று வியப்பு மேலிட பகிர்ந்தார்.

முன்னதாக, நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுடன் இணைந்து வர்த்தக ரீதியான விண்வெளி திட்டத்தை அமெரிக்காவின் அக்சியம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 4 வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐஎஸ்எஸ்) அனுப்பி, 2 வார காலம் ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தில் இஸ்ரோ சார்பில் பயணிப்பதற்கு, ககன்யான் திட்டத்துக்காக ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்த விமானப்படை விமானியான ஷுபன்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டார். அவருடன் அமெரிக்காவின் பெக்கி விட்சன் (கமாண்டர்), ஹங்கேரியின் திபோர் கபு, போலந்தின் ஸ்லாவோசி உஸ்னான்ஸ்கி ஆகிய வீரர்களும் இத்திட்டத்தில் இணைந்தனர்.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட்டுடன் இணைந்த டிராகன் விண்கலம் மூலம் இந்த குழுவினர் கடந்த 25-ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டனர். டிராகன் விண்கலம் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு, சர்வதேச விண்வெளி மையத்தில் இணைந்தது. டிராகன் விண்கலத்தில் வந்த ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களையும், சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்கெனவே தங்கி ஆய்வு பணி மேற்கொண்டு வரும் குழுவினர் கட்டியணைத்து வரவேற்றனர்.

டிராகன் குழுவினர் 2 வார காலத்துக்கு அங்கு தங்கியிருந்து, பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். உணவு தானியங்கள், பாசிகளை வளர்த்தல், நுண்ணிய நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள், புவிஈர்ப்பு விசை இல்லாத சூழலில் மின்னணு கருவிகள் மூலம் மனிதர்கள் உரையாடுவது, விண்வெளி சூழலில் ஊட்டச்சத்து, தாவரங்களின் பாரம்பரிய பண்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது உட்பட மொத்தம் 60 ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். அதன்பிறகு, டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x