Last Updated : 28 Jun, 2025 06:38 PM

 

Published : 28 Jun 2025 06:38 PM
Last Updated : 28 Jun 2025 06:38 PM

சட்டக் கல்லூரி மாணவி வழக்கு: முதல்வர் மம்தா, திரிணமூல் காங். மீது பாஜக சரமாரி குற்றச்சாட்டு

கொல்கத்தா: ‘கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கில் கைதான அனைவரும் திரிணமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்கள்’ என்று பாஜக கூறியுள்ளது.

இது தொடர்பாக பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறும்போது, "இது ஒரு வகையில் அரசால் ஆதரிக்கப்படும் மிருகத்தனமான கொடூரக் குற்றம். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அவர்கள் இந்த விவகாரத்தை விசாரித்து நடந்தவற்றை சொல்வார்கள். எம்.பி.க்கள் பிப்லாப் குமார் தேப் மற்றும் மனன் குமார் மிஸ்ரா, முன்னாள் எம்.பிக்கள் சத்யபால் சிங் மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் நடக்கும் சம்பவங்களால் நாடே அதிர்ச்சியில் உள்ளது. சமீப காலங்களில் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பல கொடூரமான குற்றங்கள் நடந்துள்ளது. ஒரு பெண் முதல்வர் உள்ள மாநிலத்தில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு பதிலாக இவ்வளவு பாதுகாப்பற்ற தன்மை உள்ளது. எனவே மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டு, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முன்வர வேண்டும்.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா முன்பு திரிணமூல் காங்கிரஸின் மாணவர் சங்கத்தில் பதவி வகித்தார். இவ்வழக்கின் மற்ற குற்றவாளிகளும் அந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்ற திரிணமூல் காங்கிரஸின் வார்த்தைகளை நம்ப முடியாது. இவர்கள் திரிணமூல் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் எங்களிடம் உள்ளன.

மாநில உள்துறை அமைச்சராகவும் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரமான குற்றங்களை லேசாக எடுத்துக்கொள்கிறார். இது என்ன மாதிரியான மனநிலை? பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி அரசுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று தெரிகிறது" என்று அவர் கூறினார்.

நடந்தது என்ன? - கொல்கத்தா கஸ்பாவில் உள்ள சவுத் கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த ஜூன் 25-ம் தேதி இரவு ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் நடைபெற்ற இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து போலீஸார் எடுத்த நடவடிக்கையில் மனோஜ் மிஸ்ரா (31), ஜயிப் அகமது (19), பிரமித் முகோபத்யாயா (20) ஆகிய மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாகவும், மாணவிக்கு நடந்த கொடுமைக்கு உரிய நீதி பெற்றுத்தரப்படும் என்றும் திரிணமூல் காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாணவிக்கு கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சாட்சிகள் பரிசோதிக்கப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கின் 4-வது நபராக கல்லூரியின் பாதுகாவலர் இன்று கைது செய்யப்பட்டார். மேலும், இவ்வழக்கு குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x