Published : 28 Jun 2025 05:48 PM
Last Updated : 28 Jun 2025 05:48 PM
நாக்பூர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 என்பது ஒன்றுபட்ட இந்தியாவுக்கு ஒரே அரசியலமைப்பு என்ற அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் அரசியலமைப்பு முகப்புரை பூங்கா தொடக்க விழா இன்று (ஜூன் 28) நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழாவில் உரையாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், "நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க ஒரே ஒரு அரசியலமைப்பு மட்டுமே இருக்க வேண்டும் என கற்பனை செய்தவர் பி.ஆர்.அம்பேத்கர். ஒரு மாநிலத்துக்கு தனி அரசியலமைப்பு என்ற யோசனையை அவர் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஒற்றை அரசியலமைப்பின் கீழ் ஒன்றுபட்ட இந்தியா என்ற அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து உச்ச நீதிமன்றம் உத்வேகம் பெற்றது" என தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் முடிவை மத்திய அரசு ஆகஸ்ட் 5, 2019 அன்று எடுத்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை, அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. 5 நீதிபதிகளில் ஒருவராக தற்போதைய தலைமை நீதிபதி கவாய் இருந்தார். 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்ற அமர்வு ஒருமனதாக உறுதி செய்தது.
அந்த நிகழ்வை குறிப்பிட்டுப் பேசிய கவாய், "பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எங்கள் முன் விசாரணைக்கு வந்தன. விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, ஒரு நாட்டிற்கு ஒரு அரசியலமைப்புச் சட்டமே பொருத்தமானது. நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க வேண்டுமென்றால், நமக்கு ஒரே ஒரு அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே தேவை என்ற அம்பேத்கரின் வார்த்தைகளை நான் நினைவுகூர்ந்தேன்" என்று தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டம் அதிகப்படியான கூட்டாட்சி முறையை வழங்குவதாகவும், போர்க் காலங்களில் நாடு ஒற்றுமையாக இருக்க முடியாது என்றும் கூறி அம்பேத்கர் விமர்சிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி கவாய், எனினும், அரசியலமைப்பு அனைத்து சவால்களுக்கும் ஏற்றதாக இருக்கும், தேசத்தை ஒற்றுமையாக வைத்திருக்கும் என்று பதிலளித்தார்.
மேலும் அவர், "அண்டை நாடுகளின் நிலைமையைப் பாருங்கள், அது பாகிஸ்தான், வங்கதேசம் அல்லது இலங்கை எதுவாக இருந்தாலும் சரி. நமது நாடு சவால்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், அது ஒற்றுமையாகவே இருந்து வருகிறது" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT