Last Updated : 28 Jun, 2025 05:38 PM

2  

Published : 28 Jun 2025 05:38 PM
Last Updated : 28 Jun 2025 05:38 PM

அரசியலமைப்பு முகவுரையில் இருந்து 'மதச்சார்பின்மை’ வார்த்தையை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர்

கவுகாத்தி: அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து 'மதச்சார்பின்மை' மற்றும் 'சோசலிசம்' ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார்.

கவுகாத்தியில் உள்ள மாநில பாஜக தலைமையகத்தில் 'தி எமர்ஜென்சி டைரீஸ்: இயர்ஸ் தட் ஃபோர்ஜ் எ லீடர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “இன்று, அவசர நிலையின்போது ஏற்பட்ட போராட்டம் மற்றும் எதிர்ப்பு பற்றிப் பேசும் ‘தி எமர்ஜென்சி டைரி’ என்ற புத்தகத்தை வெளியிட்டோம். அவசர நிலை பற்றிப் பேசும்போது, ​​அதன் மீதமுள்ள விளைவுகளை நீக்க இதுவே சரியான தருணம்.

பிரதமர் மோடி காலனித்துவ ஆட்சியின் மரபை அழிக்க பாடுபடுவது போல, அவசர நிலையின் இரண்டு முக்கிய விளைவுகள் மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகளை நமது அரசியலமைப்பில் சேர்த்தது. மதச்சார்பின்மை என்பது சர்வ தர்ம சம்பவத்தின் இந்தியக் கருத்துக்கு எதிரானது என்று நான் நம்புகிறேன். அதேபோல சோசலிசம் ஒருபோதும் உண்மையில் நமது பொருளாதாரக் கண்ணோட்டமாக இருக்கவில்லை. நமது பார்வை எப்போதும் சர்வோதய அந்த்யோதயாவில் இருந்தது.

எனவே, மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற இந்த இரண்டு வார்த்தைகளையும் அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து நீக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், அவை அசல் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை. பின்னர் இந்திரா காந்தியால் அவசர நிலையின்போது இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன” என்று அவர் கூறினார்.

முன்னதாக, நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் 50-ஆம் ஆண்டை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, “அவசரநிலையின் போது இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இரண்டு வார்த்தைகள், அதாவது மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகியவை சேர்க்கப்பட்டன. இந்த இரண்டு வார்த்தைகளும் முன்பு முகவுரையில் இல்லை.

‘மதச்சார்பின்மை’என்ற வார்த்தை முதலில் இந்திய அரசியலமைப்பில் இல்லை. மதச்சார்பின்மை பற்றிய கருத்துக்கள் இருந்திருக்கலாம். அவை ஆட்சி மற்றும் அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் முகவுரையில் இருக்க வேண்டுமா? அவை நீக்கப்பட வேண்டும்” என்று பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x