Last Updated : 27 Jun, 2025 05:01 PM

3  

Published : 27 Jun 2025 05:01 PM
Last Updated : 27 Jun 2025 05:01 PM

மேற்கு வங்கத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை: பாஜக குற்றச்சாட்டு

சுகந்த மஜும்தார்

கொல்கத்தா: கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மாநிலத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது என்று மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்க தலைவருமான சுகந்த மஜும்தார் குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகந்த மஜும்தார், “கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் ஒரு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

தற்போது, கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் ஒரு மாணவி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் சம்பவம், மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாதுகாப்பாக இல்லை என்பதையே காட்டுகிறது.

முதல்வர் மம்தா பானர்ஜியின் நேரடி கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ள போதிலும், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஒரு மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது, கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது.

காளிகஞ்ச் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) வெற்றி பேரணியின் போது நடந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.

சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஒரு பெரிய போராட்டம் நடத்தப்படும். முதல்வர் மம்தா பானர்ஜி தனது நாற்காலியில் அமர உரிமை இல்லை. அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.

நடந்தது என்ன?: கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் (ஜூன் 25) இரவு 7.30 மணி முதல் இரவு 10.50 மணி வரை கல்லூரி வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை நடந்ததாக, பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்திருப்பதாக கொல்கத்தா காவல்துறையின் மூத்த அதிகாரி இன்று (ஜூன் 27, 2025) தெரிவித்துள்ளார். மேலும் அவர், “பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் கஸ்பா காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனோஜித் மிஸ்ரா (30 வயது), பிரமித் முகர்ஜி (20 வயது), ஜைப் அகமது (19 வயது) ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களில், மனோஜித் மிஸ்ரா முன்னாள் மாணவர். மற்றவர்கள், கல்லூரியின் தற்போதைய மாணவர்கள். மனோஜித் மிஸ்ராவும், ஜைப் அகமதுவும் நேற்று (ஜூன் 26) மாலை 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது குற்றவாளியான பிரமித் முகர்ஜி இன்று (ஜூன் 27) அதிகாலை 12.30 மணியளவில் அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சாட்சிகள் பரிசோதிக்கப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x