Last Updated : 27 Jun, 2025 12:32 PM

18  

Published : 27 Jun 2025 12:32 PM
Last Updated : 27 Jun 2025 12:32 PM

அரசியல் சாசனத்தில் உள்ள ‘மதச்சார்பின்மை’ வார்த்தை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்: ஆர்எஸ்எஸ்

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே

புதுடெல்லி: அம்பேத்கர் வரைந்த இந்திய அரசியல் சாசன முகவுரையில் இல்லாத ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘சோசலிசம்’ ஆகியவை வார்த்தைகள் தொடருவது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் 50-ம் ஆண்டை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, “1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவசரநிலைச் சட்டத்தை பிரகடனத்தினார். அவசரநிலையின் போது அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தால் மக்களுக்கு எதிராக எண்ணற்ற அநீதிகள் நிகழ்த்தப்பட்டன. 250 பத்திரிகையாளர்கள் உட்பட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

அந்தக் கால அரசாங்கம் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்தது. பல வழிகளில் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியது. காங்கிரஸ் கட்சி தனது ‘கொடூரமான செயலுக்காக’ தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நீதித்துறை சுதந்திரமும் குறைக்கப்பட்டது. அவசரநிலையின் போது இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இரண்டு வார்த்தைகள் - அதாவது மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் - ஆகியவை சேர்க்கப்பட்டன. இந்த இரண்டு வார்த்தைகளும் முன்பு முகவுரையில் இல்லை. முகவுரை தேசத்திற்கு நித்தியமானது. ஆனால் சித்தாந்தத்தின் அடிப்படையிலான சோசலிச கருத்துக்கள் இந்தியாவிற்கு நித்தியமா?

‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை முதலில் இந்திய அரசியலமைப்பில் இல்லை. மதச்சார்பின்மை பற்றிய கருத்துக்கள் இருந்திருக்கலாம், அவை ஆட்சி மற்றும் அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் - அது வேறு விஷயம். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் முகவுரையில் இருக்க வேண்டுமா? இது மறுபரிசீலனைக்கு தகுதியான ஒன்று.

ஏனென்றால், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரிடப்பட்ட கட்டிடத்தில் நின்று கொண்டு நான் இதைச் சொல்கிறேன் - இந்த வார்த்தைகள் அவரால் சேர்க்கப்படவில்லை என்பது எனக்குத் தெரியும். அவசரநிலையின் போது குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்றம் பயனற்றதாக இருந்தபோது, ​​நீதித்துறை முடக்கப்பட்டபோது இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. அந்த நேரத்தில், இந்த வார்த்தைகள் சொருகப்பட்டன.

தற்போதைய காங்கிரஸ் தலைவரின் (ராகுல் காந்தி) மூதாதையர்கள்தான் அரசியலமைப்புக்கு சேதத்தை ஏற்படுத்தினர். ஆனால் இப்போது அவர் அதே அரசியலமைப்பின் நகல்களை கையில் எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துகிறார்.” என விமர்சித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x