Last Updated : 26 Jun, 2025 03:07 PM

12  

Published : 26 Jun 2025 03:07 PM
Last Updated : 26 Jun 2025 03:07 PM

“இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது” - அமித் ஷா

புதுடெல்லி: “இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று நான் மனதார நம்புகிறேன். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளையும், குறிப்பாக அனைத்து அலுவல் மொழிகளையும் வளப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற அலுவல் மொழித் துறையின் பொன்விழா கொண்டாட்டங்களில் உரையாற்றிய அமித் ஷா, “இன்று, இந்த பிரம்மாண்டமான மண்டபத்தில், நமது அலுவல் மொழியை விரும்பும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குறிப்பிடத்தக்க சந்தர்ப்பத்தில், நாடு முழுவதும் உள்ள இந்தி மற்றும் இந்திய மொழிகளைப் போற்றும் அனைவருக்கும், அவர்கள் எங்கிருந்தாலும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் 1975 முதல் 2025 வரையிலான 50 ஆண்டுகால பயணத்தில், இந்தியாவின் சுயமரியாதையை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளின் வரலாற்றில் அலுவல் மொழியின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை; எந்த வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக்கூடாது, ஆனால் நம் மொழியைப் போற்ற வேண்டும். நம் மொழியைப் பேச வேண்டும், நம் மொழியில் சிந்திக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் இருக்க வேண்டும்.

அடிமைத்தனத்தின் மனநிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும். ஒருவர் தனது மொழியில் பெருமை கொள்ளாத வரை, தனது மொழியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத வரை, அடிமைத்தனத்தின் மனநிலையிலிருந்து நாம் விடுபட முடியாது.

மொழி என்பது வெறும் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, அது தேசத்தின் ஆன்மா. மொழி இல்லாமல் நமது வேர்கள், மரபுகள், வரலாறு மற்றும் கலாச்சாரம் முன்னேற முடியாது. மொழிகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவற்றை வளப்படுத்துவதும் முக்கியம். வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளையும், குறிப்பாக அனைத்து அலுவல் மொழிகளையும் வளப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று நான் மனதார நம்புகிறேன். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். இந்தி மற்றும் இந்திய மொழிகள் இணைந்து நமது சுயமரியாதை திட்டத்தை அதன் இறுதி இலக்கை நோக்கி கொண்டு செல்ல முடியும்.

ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார். காசி-தமிழ் சங்கமம், காசி-தெலுங்கு சங்கமம், சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம், ஷாஷ்வத் மிதிலா மஹோத்ஸவ் மற்றும் பாஷா சங்கம் ஆகியவை நடத்தப்பட்டன. இவை அனைத்தும் ஒரு சிறந்த தொடக்கத்தை உருவாக்கி, நமது நாட்டின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்கான தளத்தை வழங்கியுள்ளன.

JEE, NEET, CUET ஆகிய போட்டித் தேர்வுகள் இப்போது 13 மொழிகளில் எழுதப்படுகின்றன. இதற்கு முன், CAPF கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கான தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத முடியும். நாங்கள் அதனை 13 மொழிகளில் எழுத அனுமதித்தோம். இன்று 95% தேர்வாளர்கள் தங்கள் தாய்மொழியில் கான்ஸ்டபிள் தேர்வை எழுதுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாட்களில் இந்திய மொழிகளின் எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது.

கடந்த சில பத்தாண்டுகளாக இந்தியாவைப் பிரிக்க மொழி ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்பட்டது. எனினும், இந்தியாவை அவர்களால் உடைக்க முடியவில்லை. ஆனால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நமது மொழிகள் இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக மாறுவதை உறுதி செய்வோம். இதற்காக, அலுவல் மொழித் துறை செயல்படும்.

பிரதமர் மோடியின் தலைமையில் அமைக்கப்படும் அடித்தளம் 2047-ல் ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்கும். அதற்கான வழியில், நமது இந்திய மொழிகளை வளர்த்து, அவற்றை வளப்படுத்துவோம். அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்போம்.

மத்திய அரசாங்கத்தில் மட்டுமல்ல, மாநில அரசாங்கத்திலும் அரசாங்கப் பணிகளில் இந்திய மொழிகளை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும். இதற்காக, நாங்கள் மாநிலங்களைத் தொடர்புகொண்டு, அவர்களை சமாதானப்படுத்தி, சம்மதிக்க வைப்போம்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x