Published : 25 Jun 2025 12:54 AM
Last Updated : 25 Jun 2025 12:54 AM
தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஆபரேஷன் சிந்தூர் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளதாக பிரதமர் நேரந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆன்மீக குருவும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இடையிலான உரையாடலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து மேலும் கூறியதாவது:
இந்தியர்களை ரத்தம் சிந்தவைக்கும் தீவிரவாதிகளுக்கு உலகின் எந்த மறைவிடமும் பாதுகாப்பானது அல்ல என்பதை நாம் நிரூபித்துக்காட்டியுள்ளோம். இந்தியர்களை தாக்கும் தீவிரவாதிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் தேடி சென்று அழிக்கப்படுவார்கள்.
எந்தவொரு பாகுபாடும் இல்லாத வலுவான இந்தியாவை விரும்பிய ஆன்மிக தலைவரின் கொள்கை வழியில் நமது அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 11 ஆண்டுகளாக எனது தலைமையிலான அரசு சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு துறையில் இந்தியாவை வலுவானதாக மாற்ற பாடுபட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு தேவைகளுக்கு வெளிநாடுகளை சாந்திருப்பது குறைந்துள்ளது. இந்திய இராணுவம் 22 நிமிடங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு எதிரியை மண்டியிட வைத்தது. எதிர்காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைக்கும்.
வீட்டுவசதி, குடிநீர் மற்றும் சுகாதார காப்பீடு உள்ளிட்ட துறைகளில் அரசின் நலத்திட்டங்கள் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு அதிகாரம் அளித்துள்ளன.
கடந்த 11 ஆண்டுகளில் முன்பை விட அதிக எண்ணிக்கையிலான ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் எய்ம்ஸ்கள் திறக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பிரமதர் மோடி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT