Published : 22 Jun 2025 06:40 AM
Last Updated : 22 Jun 2025 06:40 AM
பாட்னா: முதியோர், மாற்றுத் திறனாளிகள் உட்பட குறிப்பிட்ட பிரிவினருக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிஹார் மாநிலத்தில் ரூ.5,736 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியின் காட்டாட்சி நடத்தியவர்களிடம் இருந்து மீட்கப்பட்டதால் பிஹார் மாநிலம் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்கிறது. முதல்வர் நிதிஷ்குமார் சிறந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கு நடைபோடுகிறது. அதற்கு பிஹார் மாநிலத்தின் பங்களிப்பு மிகப்பெரிதாக இருக்கும்’’ என்று பாராட்டினார்.
இந்நிலையில், பிஹாரில் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி முதல்வர் நிதிஷ்குமார் நேற்று அறிவித்தார். பிஹார் மாநில சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இந்த உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது: முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு உதவித் தொகையை உயர்த்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உதவித் தொகை வரும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும். மாதந்தோறும் 10-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இந்தத் தொகை செலுத்தப்படும். இதன் மூலம் மாநிலத்தில் ஒரு கோடியே 9 லட்சத்து 69,255 பேர் பயன்பெறுவார்கள்.
முதியோர்கள் இந்த சமூகத்தின் மதிப்புமிக்க அங்கமாக உள்ளனர். அவர்கள் கவுரவமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்வதே எங்கள் அரசின் முக்கிய நோக்கம்.இவ்வாறு முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கிராமத் தலைவர்களுக்கான அதிகாரத்தையும் பிஹார் அரசு அதிகரித்துள்ளது. அதன்படி கிராமத் தலைவர்கள் ரூ.10 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு அவர்களே ஒப்புதல் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது முன்பு ரூ.5 லட்சமாக இருந்தது. தற்போது அந்தத் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து ராஜ் முறையின் கீழ் ஜில்லா பரிஷத் தலைவர்களின் அலவன்ஸ் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜில்லா பரிஷத் துணை தலைவர்களுக்கு அலவன்ஸ் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற நிர்வாகிகளுக்கு ரூ.5,000 வழங்கப்பட்ட அலவன்ஸ் ரூ.7,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT