Published : 21 Jun 2025 06:47 PM
Last Updated : 21 Jun 2025 06:47 PM
புதுடெல்லி: “வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது உள்ளிட்ட செயல்பாடுகள் ‘ஜனநாயகத்துக்கு விஷம்’ போன்றது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மேலும், வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் உத்தரவிட்டுள்ளது. இது ஆதாரங்களை அழிக்கும் செயல். இதன்மூலம் வெற்றியை முன்கூட்டியே தீர்மானித்திருப்பது தெளிவாகிறது. இது ஜனநாயகத்துக்கு விஷம் போன்றது” என கூறப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி வரும் ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல்கள், வாக்கெடுப்புத் தரவுகள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரி வருகிறார். தேர்தல் முடிவு தொடர்பான தீர்ப்பை எதிர்த்து 45 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படாவிட்டால், சிசிடிவி, வெப்காஸ்டிங் மற்றும் வீடியோ காட்சிகளை அழிக்குமாறு மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து ராகுல் காந்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மே 30 அன்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், தேர்தல் செயல்பாட்டின்போது புகைப்படம் எடுத்தல், வீடியோகிராபி, சிசிடிவி மற்றும் வெப்காஸ்டிங் போன்ற பல பதிவு சாதனங்கள் மூலம் தேர்தல் செயல்முறையின் பல்வேறு கட்டங்களைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
‘போட்டியிடாதவர்கள் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களையும், தீங்கிழைக்கும் செய்திகளையும் பரப்புவதற்காக இந்த உள்ளடக்கத்தை சமீபத்தில் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இது எந்தவொரு சட்டப்பூர்வ முடிவுக்கும் வழிவகுக்காது. அத்தகைய உள்ளடக்கத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சூழலுக்கு வெளியே பயன்படுத்துவதன் மூலம் மறு ஆய்வு செய்ய வழிவகுத்துள்ளது.
பல்வேறு கட்டங்களில் சிசிடிவி தரவு, வலை ஒளிபரப்பு தரவு மற்றும் தேர்தல் செயல்முறைகளின் புகைப்படம் எடுத்தல் ஆகியவை 45 நாட்களுக்குப் பாதுகாக்கப்படும். தேர்தல் முடிவை எதிர்த்து 45 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படாவிட்டால், அந்தத் தரவுகளை அழிக்கலாம்" என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT