Published : 21 Jun 2025 02:23 PM
Last Updated : 21 Jun 2025 02:23 PM
பிஹார்: பிஹாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிஹார் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி, ஜேடியு- பாஜக கூட்டணி, ஜன் சுராஜ் என மும்முனை போட்டி நிலவும் என்றும் கணிக்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதோடு, என்டிஏ-வில் சரணடைந்துள்ள நிதிஷ் குமார், தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறார்.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில், “சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிஹாரில் முதியோர் , மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த ஓய்வூதிய உயர்வு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும். இத்தொகை ஒவ்வொரு மாதத்திலும் 10 ஆம் தேதி அன்று அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இது 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பயனாளிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சமூகத்தின் ஒரு விலைமதிப்பற்ற அங்கமாக முதியவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே எங்களின் முதன்மையான நோக்கம். மாநில அரசு இந்த திசையில் தொடர்ந்து பயணிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிஹார் மாநிலம், சிவானில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர், பிஹாரில் காட்டாட்சியை (லாலு ஆட்சியை) அகற்றிய மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்காரணமாக பிஹார் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT