Published : 21 Jun 2025 07:33 AM
Last Updated : 21 Jun 2025 07:33 AM
சிவான்: பிஹாரில் காட்டாட்சியை அகற்றிய மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். இதன்காரணமாக பிஹார் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலம், சிவானில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.
சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் மர்ஹோராவில் அமைந்துள்ள டீசல் ரயில் இன்ஜின் ஆலையில் கினியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ரயில் இன்ஜின் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் இன்ஜினை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:
பிஹாரில் காட்டாட்சியை (லாலு ஆட்சியை) அகற்றிய மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்காரணமாக பிஹார் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிஹார் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அன்றைய காட்டாட்சி காலத்தில் பிஹாரின் அனைத்து வளங்களும் சூறையாடப்பட்டன. மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. பிஹார் இளைஞர்கள் வேலை தேடி பல்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இப்போது பிஹாரில் இருந்து வெளிநாட்டுக்கு ரயில் இன்ஜின் ஏற்றுமதி தொடங்கி உள்ளது.
மத்தியிலும் பிஹாரிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்துகிறது. இரட்டை இன்ஜின் அரசால் பிஹாரில் மக்கள் நலத்திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படுகின்றன. முதல்வர் நிதிஷ்குமார் பிஹாரை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துகிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் பிஹாரின் பல்வேறு கிராமங்களில் 55,000 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1.5 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. 1.5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் 45 பொது சேவை மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஏழை குடும்பங்களுக்காக 57 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நாடு முழுவதும் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். இதில் பிஹாரில் மட்டும் 4.75 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்தியபோது ஏழைகள், பரம ஏழைகளாக மாறினர். பிஹாரில் காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது அனைத்து துறைகளிலும் ஊழல் வியாபித்து பரவியிருந்தது. நாள்தோறும் புதிய ஊழல்கள் வெளிவந்து கொண்டே இருந்தன.
இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் ஊழல் ஒழிக்கப்பட்டு, வளர்ச்சி திட்டங்கள் வேகம் பெற்றுள்ளன. அனைத்து தரப்பு மக்களும் சரிசமமாக வளர்ச்சி அடைந்து வருகின்றனர். பிஹாரை சேர்ந்த சில அரசியல் கட்சிகள் தங்கள் குடும்பங்களின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தி வருகின்றன. அதற்கு நேர்மாறாக தேசிய ஜனநாயக கூட்டணி மக்களின் நலனில் அக்கறை செலுத்துகிறது.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்கள், அம்பேத்கரை அவமரியாதை செய்துள்ளனர். அதற்காக அவர்கள் இதுவரை மன்னிப்பு கோரவில்லை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை அவர்கள் மதிக்கவில்லை. அம்பேத்கரை அவமதித்தவர்களுக்கு பிஹார் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஒடிசாவில் பாஜக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நேற்று பிரம்மண்ட அரசு நலத்திட்ட விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.18,600 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT