Last Updated : 20 Jun, 2025 07:08 PM

1  

Published : 20 Jun 2025 07:08 PM
Last Updated : 20 Jun 2025 07:08 PM

2024 மக்களவைத் தேர்தலுக்காக பாஜக ரூ.1,494 கோடி, காங். ரூ.620 கோடி செலவு: ஏடிஆர் தகவல்

புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சி ரூ.1,494 கோடியை செலவிட்டுள்ளது. இது மொத்த தேர்தல் செலவில் 44.56% ஆகும் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர் - ADR) தெரிவித்துள்ளது.

மார்ச் 16 முதல் ஜூன் 6, 2024 வரை மக்களவை மற்றும் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் ரூ.3,352.81 கோடியைச் செலவிட்டன என ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தல்களில் 32 தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி ரூ.1,494 கோடியை செலவிட்டுள்ளது. காங்கிரஸ் ரூ.620 கோடி செலவிட்டுள்ளது. இது மொத்த செலவில் 18.5% ஆகும். இந்தச் செலவில் தேசியக் கட்சிகள் ரூ.2,204 கோடிக்கும் (65.75%) அதிகமாகச் செலவிட்டன. அதேபோல தேர்தலுக்காக வசூலிக்கப்பட்ட மொத்த நிதியில், தேசிய கட்சிகள் ரூ.6,930.24 கோடி (93.08%) வசூலித்தன. அதே நேரத்தில் மாநில கட்சிகள் ரூ.515.32 கோடி (6.92%) வசூலித்தன.

பொதுத் தேர்தலுக்கு 90 நாட்களுக்குள்ளும், மாநிலத் தேர்தலுக்கு 75 நாட்களுக்குள்ளும் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாய செலவு அறிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பகுப்பாய்வு அமைந்துள்ளது.

கட்சிகளின் செலவுப் பட்டியலில் விளம்பரம் முதலிடத்தில் உள்ளது. கட்சிகள் தங்கள் மொத்த செலவில் ரூ.2,008 கோடி அல்லது 53%-க்கும் அதிகமாக விளம்பரத்துக்கு செலவிட்டன. அடுத்ததாக பயணச் செலவுகள் ரூ.795 கோடியாக இருந்தன. அதைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கு மொத்தமாக ரூ.402 கோடி செலவிடப்பட்டது. கட்சிகள் டிஜிட்டல் பிரச்சாரங்களுக்காக ரூ.132 கோடிக்கும் அதிகமாகவும், வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை விளம்பரமாக வெளியிடுவதற்காக ரூ.28 கோடிக்கு அதிகமாகவும் செலவிட்டன.

தேசிய அரசியல் கட்சிகள் பெற்ற நிதியில் கிட்டத்தட்ட 60% 'தெரியாத' நபர்கள் மூலம் வந்தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 அரசியல் கட்சிகளின் விளம்பரத்துக்கான மொத்த செலவில், ரூ.1,511.30 கோடி அல்லது 75.25% தேசிய கட்சிகளால் செலவிடப்பட்டது. ரூ.496.99 கோடி அல்லது 24.75% மாநில கட்சிகளால் செலவிடப்பட்டது.

பயணச் செலவுகளும் நட்சத்திர பிரச்சாரகர்களுக்காக பெரிதும் இருந்தன. பயணத்துக்காக செலவிடப்பட்ட ரூ.795 கோடியில், ரூ.765 கோடி (96.22%) உயர்மட்ட கட்சி தலைவர்களை அழைத்துச் செல்வதற்காகவும், மற்ற தலைவர்களுக்கு ரூ.30 கோடி மட்டுமே செலவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல ஜம்மு - காஷ்மீர் பிடிபி மற்றும் கேரள காங்கிரஸ் (எம்) ஆகிய இரண்டு கட்சிகள் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் செலவு எதுவும் செய்யவில்லை என அறிவித்தன. 2024 பொதுத் தேர்தலில் மொத்தம் 690 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் போட்டியிட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x