Last Updated : 20 Jun, 2025 06:35 PM

 

Published : 20 Jun 2025 06:35 PM
Last Updated : 20 Jun 2025 06:35 PM

‘கங்கை தூய்மை’ என்பது பாஜகவின் வெற்று தேர்தல் கோஷம் ஆகிவிட்டது: காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: கங்கை நதியை தூய்மைப்படுத்துவது என்பது கடந்த 11 ஆண்டுகளில் வெறும் தேர்தல் கோஷமாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

பிஹாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான நமாமி கங்கா திட்டத்தின் கீழ் ரூ.1800 கோடி மதிப்பில் 6 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பிஹார் பின்தங்கி இருப்பதற்கு அதன் முந்தைய ஆட்சியாளர்களான காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமுமே காரணம் என குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் பிஹார் பயணம் தொடர்பாக ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் எத்தனை போலி அறிவிப்புகளை வெளியிட்டாலும், இலவச விளம்பரங்களுக்காக எத்தனை ரிப்பன்களை வெட்டினாலும், பிஹாரில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முற்றிலும் தவறிவிட்டது என்பதே உண்மை. பிஹாரில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான அடக்குமுறை உச்சத்தில் உள்ளது.

சட்டம் - ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. குற்றவாளிகள் கட்டுக்கடங்காமல் போய்விட்டனர். சாமானிய குடிமக்கள் உதவியற்றவர்களாக உள்ளனர். ஒவ்வொரு நாளும், கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. இளைஞர்களுக்கு மாநிலத்தில் வேலைவாய்ப்பு இல்லை, அவர்கள் பிஹாரில் இருந்து கட்டாயத்தின் பேரில் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

கங்கை மாசுபடுவது குறித்து பிரதமர் மோடி தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால், கடந்த 11 ஆண்டுகளில், 'கங்கை தூய்மை' என்பது வெறும் தேர்தல் முழக்கமாக மாறிவிட்டது. இது ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் திடீரென்று அவர்களுக்கு நினைவுக்கு வருகிறது.

பிஹாரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் முன்பை விட அதிகமாக கங்கை மாசுபட்டுள்ளது. கங்கை தூய்மை திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் ஊழலின் ஊற்றுக்கண்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டுதல், தொடக்க விழாக்கள், பெரும் விளம்பரங்கள் ஆகியவை மட்டுமே நடக்கின்றன. எந்த வேலையும் நடைபெறுவதில்லை. எந்தவொரு உறுதியான விளைவும் இல்லை. பாட்னா மற்றும் பிஹாரில் கங்கை நதியின் மோசமான நிலையை தேசிய பசுமைத் தீர்ப்பாயமே (NGT) அம்பலப்படுத்தி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “பஹல்காமில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்துவதில் மத்திய உள்துறை அமைச்சர் முற்றிலும் தோல்வியடைந்துள்ளார். இந்த பயங்கரவாதிகள் பூஞ்ச் ​​(டிசம்பர் 2023) மற்றும் ககாங்கிர் & குல்மார்க் (அக்டோபர் 2024) பயங்கரவாதத் தாக்குதல்களிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுப்பதில் மத்திய உள்துறை அமைச்சர் படுதோல்வியடைந்துள்ளார். அவர் சாதித்ததெல்லாம் அவரது மகனுக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பை வழங்கியதுதான்.

இப்போது மத்திய உள்துறை அமைச்சர் மிகவும் அபத்தமான கருத்துகளைத் தெரிவிக்கிறார். கோடிக்கணக்கான இந்தியர்கள் அவரை விட அதிகமாக இந்திய மொழிகளைப் பேசுகிறார்கள். அவர்கள் ஆங்கிலம் பேசுவதில்லை. ஒரு காலத்தில் துணிச்சலுக்குப் பெயர்பெற்ற சர்தார் வல்லபாய் படேல் வகித்த பதவிக்கு அமித் ஷா ஓர் அவமானம்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x