Published : 20 Jun 2025 07:00 PM
Last Updated : 20 Jun 2025 07:00 PM
பாட்னா: “பிரதமர் நரேந்திர மோடியின் பிஹார் வருகை என்பது மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே பிரதமர் கவனம் செலுத்துகிறார்” என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறினார்
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், "பிரதமர் மோடி முதல் முறையாக வரவில்லை. அதேபோல பிரதமர் மோடி பிஹாரின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் வரவில்லை. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகளைப் பெறுவதற்காக வருகிறார். மாநிலத்தில் புதிய வளர்ச்சித் திட்டங்கள் என பிரதமர் சொல்கிறார். ஆனால், ஏற்கெனவே இதில் பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. உதாரணத்துக்கு லோகோமோட்டிவ் தொழிற்சாலை ஏற்கெனவே மர்ஹோராவில் உள்ளது. இது ஒன்றும் புதிதல்ல.
பிஹார் மக்களின் முக்கியமான பிரச்சினைகளை பிரதமர் புறக்கணிக்கிறார். பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் பிஹார் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கடந்த 10-12 ஆண்டுகளாக, அறிவிப்புகள் வெளியிடப்படுவதை மட்டுமே மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பிஹாரில் இருந்து வேலைக்காக பெரிய அளவிலான இடம்பெயர்வு எப்போது நிறுத்தப்படும் என்பதை பிரதமர் சொல்ல வேண்டும். மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினார்
முன்னதாக, கோபால்கஞ்சில் பேசிய பிரசாந்த் கிஷோர், "கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பிஹாருக்கு வருகிறார். இது தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் ஒரு தேர்தல் உத்தி. தேர்தல்கள் நடைபெறும் இடங்களில், பிரதமர் மோடி அங்கு தொடர்ச்சியாக அரசாங்க வருகையாக வந்து அரசியல் பிரச்சாரம் செய்கிறார். பிஹாரிலும் இதேதான் நடக்கிறது.
லட்சக்கணக்கான பிஹாரி இளைஞர்கள் மோடியின் வேண்டுகோளின் பேரில் பாஜகவுக்கு வாக்களிக்கிறார்கள். ஆனால் அவர்கள் குஜராத் போன்ற மாநிலங்களில் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பிஹாரில் இருந்து இடம்பெயர்வு எப்போது நிறுத்தப்படும் என்று பிரதமர் மோடி சொல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். பிஹாரில் அல்லாமல் குஜராத்தில் மட்டும் தொழிற்சாலைகள் ஏன் அமைக்கப்படுகின்றன என்று பிரதமர் மோடியிடம் கேட்க வேண்டிய நேரம் இது” என்றார்
பிஹார் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி, ஜேடியு- பாஜக கூட்டணி, ஜன் சுராஜ் என மும்முனை போட்டி நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT