Published : 20 Jun 2025 04:38 PM
Last Updated : 20 Jun 2025 04:38 PM
சிவான்: பிஹாரின் மோசமான நிலைக்கு முந்தைய ஆட்சியாளர்களான காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமுமே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹாரின் உள்கட்டமைப்பு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டில் பிஹாருக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட நான்காவது பயணம் இது. இதற்கு முன், ஜனவரி 24, ஏப்ரல் 24 மற்றும் மே 29 - 30 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி பிஹாருக்கு வருகை தந்தார்.
சிவான் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த மண் இது. இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அந்த வகையில், சிவான் நாட்டுக்கு அதிகாரம் அளிக்கும் இடம். சமீபத்தில், நாட்டின் சில முக்கிய தலைவர்களைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தலைவர்களும் இந்தியாவின் விரைவான முன்னேற்றத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
பிஹாரின் ஒவ்வொரு கிராமத்திற்காகவும், ஒவ்வொரு வீட்டுக்காகவும், ஒவ்வொரு இளைஞருக்காகவும் நான் இன்னும் அதிகமாகச் செய்ய விரும்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் 55,000 கி.மீ கிராமப்புற சாலைகளை அமைத்துள்ளது. 1.5 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியுள்ளது. 26 கோடி வீடுகளுக்கு குழாய் நீரை வழங்கியுள்ளது” என தெரிவித்தார்.
முன்னதாக, இந்தப் பிராந்தியத்தில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.400 கோடி மதிப்பில் புதிய வைஷாலி - தியோரியா ரயில் பாதை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர், இந்த வழித்தடத்தில் புதிய ரயில் போக்குவரத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வடக்கு பிஹாரில் போக்குவரத்து தொடர்பை அதிகப்படுத்தும் வகையில் முசாபர்பூர், பேட்டியா வழியாக பாடலிபுத்திரம் – கோரக்பூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் போக்குவரத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
“இந்தியாவில் தயாரிப்போம் - உலகுக்காக தயாரிப்போம்” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், கினியா குடியரசுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மர்ஹவுரா தொழிற்சாலையில் கட்டமைக்கப்பட்ட நவீன ரயில் என்ஜினை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் முதலாவது ரயில் என்ஜின் இதுவாகும். உயர் குதிரைதிறன் கொண்ட என்ஜின்கள், நவீன குளிர் சாதன உந்துவிசை அமைப்பு, நுண்ணிய நடைமுறை அடிப்படையிலான கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்றவற்றுடன் இந்த ரயில் வண்டி கட்டமைக்கப்பட்டுள்ளது.
கங்கை நதியை பாதுகாத்தல், புனரமைத்தலுக்காக ரூ.1800 கோடி மதிப்பில் நமாமி கங்கா திட்டத்தின் கீழ் 6 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். பிஹாரில் பல நகரங்களைச் சேர்ந்த குடிமக்களுக்கு தூய்மையான, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை நோக்கமாக கொண்டு ரூ.3000 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோகம், துப்புரவு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
பிஹாரில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 53,600-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஒதுக்கீடு கடிதத்தை பிரதமர் வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள 6,600-க்கும் மேற்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு பிரதமர் வழங்கினார். பிஹார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, ஆளுநர் ஆரிஃப் முகமது கான் மற்றும் பிற மூத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT