Published : 19 Jun 2025 08:16 AM
Last Updated : 19 Jun 2025 08:16 AM
புதுடெல்லி: பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு 33 வயதான சிவில் காண்டிராக்டர் ஒருவருடன் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தனது தாய்மாமன் உதவியுடன் தாய் வீட்டுக்கு அந்த சிறுமி 10-ம் வகுப்பு தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு முடிந்த பின்னர் கணவர் வீட்டுக்கு அவர் செல்லவில்லை.
இந்நிலையில் கணவர் வீட்டில் தன்னை கொடு மைப்படுத்துகிறார்கள் என்று கூறி, தனது நண்பர் ஒருவருடன் வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் தனக்கு பாது காப்பு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் உஜ்ஜால் புய்யான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: 16 வயதான சிறுமியை கட்டாயப்படுத்தி 33 வயதான நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அவரது நண்பர் மீது சிறுமி கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியைக் கொல்வேன் என்று கணவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
எனவே, அவரது கணவர் வீட்டாரிடமிருந்து, சிறுமிக்கும், அவரது நண்பருக்கும் பாது காப்பை பிஹார் போலீஸார் வழங்கவேண்டும். வரும் 9-ம் தேதி இதுதொடர்பாக விசாரணை நடத்த முழுவிவரங்களையும் ஆவணமாகத் தயாரித்து சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT