Last Updated : 17 Jun, 2025 06:42 PM

2  

Published : 17 Jun 2025 06:42 PM
Last Updated : 17 Jun 2025 06:42 PM

“வகுப்புவாத சக்திகளை பாதுகாக்க விரும்புகிறார் ராகுல் காந்தி” - அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

கோப்புப் படம்

திப்ரூகர்: காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் எப்போதும் வகுப்புவாத சக்திகளைப் பாதுகாக்க விரும்புவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

பக்ரித் பண்டிகையை ஒட்டி கடந்த 8-ம் தேதி அசாமின் பல இடங்களில் பசுக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும், அதன் மாமிசத் துண்டுகள் சில கோயில்களில் வீசப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக துப்ரி நகரில் 50 பேரையும், கோல்பாராவில் ஐந்து பேரையும் போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய், "அசாமின் ஒவ்வொரு கிராமத்திலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவியுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், அந்த அமைப்பு சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்க முயற்சிக்கிறது. இந்த சம்பவங்களும் அதைத் தொடர்ந்து நடந்த மோதல்களும் பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் உளவுத்துறை தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளன" என குற்றம் சாட்டியிருந்தார்.

கவுரவ் கோகாயின் இந்தக் கருத்துக்கு பதில் அளித்துள்ள அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "ராகுல் காந்தியும் காங்கிரஸும் எப்போதும் வகுப்புவாத சக்திகளைப் பாதுகாக்க விரும்புகிறார்கள். அதன் காரணமாகத்தான், மாநிலத்தில் உள்ள கோயில்களில் மாட்டிறைச்சித் துண்டுகளை வீசியவர்களைப் பாதுகாக்க முயல்கிறார்கள்.

இந்துக்கள் ஒரு பசுவை கொன்று அதன் பாகங்களை கோயில்களில் வீசுவார்கள் என்ற கூறுபவர்கள் எதிர்வினைக்குக் கூட தகுதியற்றவர்கள். இத்தகைய மக்கள் மிகவும் வித்தியாசமான மனநிலையைக் கொண்டுள்ளனர். ஒரு இந்து, ஒரு பசுவை அறுத்து அதன் துண்டுகளை கோயில்களில் வீசுவாரா? அப்படியானால், மீதமுள்ள பகுதிகள் எங்கே? அவை எங்கே போயின?

சில தவறான இளைஞர்கள் இந்த சம்பவங்களில் ஈடுபட்டதாக உள்ளூர்வாசிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இருந்தும், காங்கிரஸ் ஏன் அவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ராகுல் காந்தியின் வழக்கமான செயல்பாடு இது. அவர்கள் எப்போதும் வகுப்புவாத சக்திகளை பாதுகாக்க விரும்புகிறார்கள். மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை அவர்கள் விரும்பவில்லை," என்று குற்றம் சாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x