Published : 16 Jun 2025 11:52 AM
Last Updated : 16 Jun 2025 11:52 AM
திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் கோட்டயம் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெட் அலர்ட்டை தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள் 204.4 மிமீக்கு மேல் மிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.
கர்நாடகா நிலவரம்: கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு, ஹாசன் மற்றும் சிவமோகா மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கர்நாடக கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்ததை அடுத்து, கர்நாடகாவின் உடுப்பி மற்றும் தட்சிண கன்னட மாவட்ட நிர்வாகங்கள் திங்கள்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளன.
கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சாகர் மற்றும் ஹோசநகர் தாலுகாக்களில் கனமழை பெய்ததால், அந்தந்த தாசில்தார்கள் திங்கட்கிழமை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவித்தனர்.
மகாராஷ்டிரா மழை நிலவரம்: மும்பை, புனே மற்றும் நவி மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் திங்கள்கிழமை காலை பலத்த மற்றும் லேசான மழை பெய்தது. மேலும், மும்பையில் இன்று பிற்பகலில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம், இன்று மும்பைக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தானே, ராய்காட் மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, ஜூன் 18 முதல் 21 வரை கோகன், கோவா மற்றும் மகாராஷ்டிரா, சவுராஷ்டிரா மற்றும் கட்ச் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 16 முதல் 17 வரை குஜராத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆந்திரா நிலவரம்: ஜூன் 19 வரை ஆந்திராவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வடக்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் (NCAP) மற்றும் யானம் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், அதனுடன் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அசாம் நிலவரம்: கவுஹாத்தியில் அடுத்த இரண்டு-மூன்று நாட்களுக்கு மேகமூட்டமான வானிலை இருக்கும் என்றும், நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT