Published : 10 Jun 2025 07:13 AM
Last Updated : 10 Jun 2025 07:13 AM
புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் பிஹாரின் மறைந்த தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் தொடங்கிய கட்சி லோக் ஜனசக்தி (எல்ஜேபி). இவர், மத்தியில் எந்த கட்சி தலைமையில் ஆட்சி வந்தாலும் கூட்டணி வைத்து அமைச்சராக இருந்தவர். இவரது மகன் சிராக் பஸ்வான், தற்போது பாஜக தலைமையிலானக் கூட்டணியில் மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறார்.
ஆராவில் நேற்றுமுன்தினம் எல்ஜேபி மாநாடு நடைபெற்றது. அப்போது எல்ஜேபி தலைவர் சிராக் பஸ்வான் பேசுகையில், ‘‘நான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன். 243 தொகுதிகளிலும் எல்ஜேபி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். பிஹார் மக்களுக்கான தேர்தலில் தனித்தொகுதி அல்லாத பொது தொகுதியில் போட்டியிடுவேன். பிஹாரை முதல் மாநிலமாக மாற்றவே இந்த முடிவை எடுக்கிறேன்’’ என்றார்.
பிஹாரில் 5 மக்களவை எம்.பி.க்கள் கொண்ட எல்ஜேபியில் ஹாஜிபூர் தொகுதி எம்.பி.யாக சிராக் உள்ளார். தேர்தலுக்காக இவர் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) சிக்கலை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், அவரது கட்சியின் 5 எம்.பி.க்கள் ஆதரவு என்டிஏ.வுக்கு மத்தியில் மட்டும் தொடர உள்ளது.
இதேபோன்ற ஒருநிலை கடந்த 2000 ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் எல்ஜேபியால் ஏற்பட்டது. முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) போட்டியிட்ட 134 தொகுதிகளிலும் எல்ஜேபி வேட்பாளர்களை நிறுத்தியது. இதனால், ஜேடியு 43 தொகுதிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பாஜக 2-வது இடமும் எல்ஜேபி ஒரே ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. இந்த ஒரு எம்எல்ஏ.வும் தற்போது ஜேடியுவில் இணைந்து விட்டார்.
பிஹாரில் சுமார் 5.3 சதவிகிதம் உள்ள தலித் பிரிவுகளில் ஒன்றாக பாஸ்வான் சமூகம் உள்ளது. இவர்களின் ஆதரவு பெற்ற ஒரே கட்சியாக எல்ஜேபி உள்ளது. இக்கட்சியுடன் சிறிதளவு முஸ்லிம் வாக்குகளும் உள்ளன. எனவே, எல்ஜேபி தனித்து போட்டியிட்டால், என்டிஏவுக்கு பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி வாக்குகளுடன் நிதிஷ் கட்சியின் வாக்குகளையும் சிராக்கின் எல்ஜேபி பிரிக்கும் சூழல் உள்ளது. பிஹாரில் 2-வது பெரிய சமூகமாக 14.3 சதவீதத்தில் உள்ள யாதவர்கள் பெரும்பாலும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் உள்ளனர். லாலுவுடன் காங்கிரஸும் கூட்டணியில் இடம்பெறுவதால் முஸ்லிம் வாக்குகளும் மெகா கூட்டணிக்கு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT