Published : 10 Jun 2025 05:54 AM
Last Updated : 10 Jun 2025 05:54 AM

படியில் தொங்கி சென்றதால் விபரீதம்: ஓடும் ரயிலில் இருந்து விழுந்து மும்பையில் 5 பேர் உயிரிழப்பு

மும்பை: மும்பை அருகே இரு புறநகர் ரயில்கள் கடந்து சென்றபோது, படியில் தொங்கி சென்ற பயணிகள் மோதிக்கொண்டு கீழே விழுந்ததில் ரயில்வே காவலர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் (சிஎஸ்எம்டி) இருந்து தானே மாவட்டம் கசரா நோக்கி நேற்று காலை 9 மணிக்கு புறநகர் ரயில் புறப்பட்டு சென்றது. முதல் வேலை நாள், அலுவலக நேரம் என்பதால் ரயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. ஏராளமானோர் படியில் தொங்கியபடி சென்றனர். இதேபோல, எதிர் திசையில் சிஎஸ்எம்டி நோக்கி வந்த புறநகர் ரயிலிலும் ஏராளமானோர் படியில் தொங்கியபடி வந்தனர்.

திவா - மும்ப்ரா பகுதியில் ரயில்கள் எதிர் எதிரே கடந்து சென்றபோது, இரு ரயில்களிலும் படியில் தொங்கியபடி வந்த பயணிகள் மோதிக்கொண்டதில், பலரும் நிலைகுலைந்து ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். இதில் ரயில்வே காவலர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய ரயில்வே வட்டாரங்கள் கூறியுள்ளன. இச்சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, மும்பையில் அனைத்து புறநகர் ரயில்களையும் தானியங்கி கதவுகளுடன் தயாரிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

‘‘விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய ரயில்வே துறை விசாரணையை தொடங்கியுள்ளது’’ என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x