Last Updated : 07 Jun, 2025 02:34 PM

 

Published : 07 Jun 2025 02:34 PM
Last Updated : 07 Jun 2025 02:34 PM

பிஹார்: சாலை விபத்தில் உயிர் தப்பிய எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிஹாரின் வைஷாலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பிஹாரின் மாதேபுராவில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ், அங்கிருந்து சாலை மார்க்கமாக கட்சி செய்தித் தொடர்பாளர் சக்தி யாதவ் ஆகியோருடன் தேசிய நெடுஞ்சாலை 22 இல் திரும்பிக் கொண்டிருந்தார். வைஷாலி மாவட்டத்தின் ஹாஜிபூரில் இன்று (ஜூன் 7) அதிகாலை 1:30 மணிக்கு, தேநீர் அருந்துவதற்காக அவரது கார் நின்றபோது, வேகமாக வந்த லாரி ஒன்று இரண்டு வாகனங்களில் மோதியது.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “நாங்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு மாதேபுராவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். வைஷாலியில் தேநீர் அருந்துவதற்காக நின்றோம். லாரி ஒன்று சமநிலையை இழந்து இரண்டு முதல் மூன்று வாகனங்களில் மோதியதைக் கண்டேன். அங்கே எனது பாதுகாப்புப் படையினர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது லாரி மோதியதால் பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். சற்று முன்னதாக லாரி சமநிலையை இழந்திருந்தால், அது எங்கள் மீதும் மோதியிருக்கலாம்.” என தெரிவித்தார்.

காயமடைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவர்கள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் வைஷாலி சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷ்யாம்நந்தன் பிரசாத் தெரிவித்தார். "விபத்தில் சிக்கியவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றால், அவர்கள் வேறு சிறந்த மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள்" என்று ஷ்யாம்நந்தன் பிரசாத் தெரிவித்தார்.

விபத்து நிகழ்ந்ததை அடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை, சராய் காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தை அடுத்து பாதுகாப்பு குறைபாடு ஏதும் உள்ளதா என போலீஸ் அதிகாரிகள் கேட்டதற்கு, "இது வெறும் விபத்துதான். இந்த விஷயத்தை முழுமையாக விசாரியுங்கள்" என கூறிவிட்டார். மேலும் அவர், பிஹாரில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் குறித்தும், உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்தும் கவலை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x