Published : 05 Jun 2025 06:54 AM
Last Updated : 05 Jun 2025 06:54 AM

நாடாளுமன்ற மழைக்கால தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்குகிறது

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் சிறப்புக் கூட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 4-ம் தேதி, மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி இந்தத் தேதிகளை பரிந்துரை செய்துள்ளது" என்றார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வரும் நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் சிறப்புக் கூட்ட கோரிக்கை நிராகரிக்கப்ப்டடுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் ரிஜிஜு அளித்த பதிலில், “விதிகளின் கீழ் அனைத்து பிரச்சினைகளையும் மழைக்கால கூட்டத் தொடரில் விவாதிக்க முடியும்" என்றார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்டமாக மழைக்கால கூட்டத்தொடர் இருக்கும். எனவே இக்கூட்டத்தொடரில் இந்த விவகாரம் முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதிக்கு எதிராக தீர்மானம்? - டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்தார்.

இதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக எதிர்க்கட்சிகளுடன் அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x