Published : 31 May 2025 07:57 AM
Last Updated : 31 May 2025 07:57 AM

ஒடிசா அரசு அதிகாரி வீட்டில் ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல்: ரூ.500 நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசினார்

புவனேஸ்வர்: ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் மூத்த அரசு அதிகாரி பைகுந்த நாத் சாரங்கியின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச வழக்கில் இருந்து தப்பிக்க 500 ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக அவர் அள்ளி வீசினார்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ஊரக வளர்ச்சி துறையின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. அந்த அலுவலகத்தில் சாலை திட்ட தலைமை பொறியாளராக பைகுந்த நாத் சாரங்கி பணியாற்றி வருகிறார். அவர் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து ஒடிசா லஞ்ச ஒழிப்பு போலீஸார், அந்த மாநிலத்தின் அனுகோள் நகரில் உள்ள பைகுந்த நாத் சாரங்கியின் வீடு மற்றும் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இவை தவிர அவரது அலுவலக அறை மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

புவனேஸ்வரின் பிடிஎன் எக்ஸோடிகா பகுதியில் உள்ள பைகுந்த நாத் சாரங்கியின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று காலை திடீரென சென்றனர். போலீஸாரை பார்த்ததும் அவர் ஜன்னல் வழியாக 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசினார். அவை காற்றில் பறந்தன. இதை குடியிருப்புவாசிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அடுக்குமாடி குடியிருப்புக்கு கீழே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், ரூபாய் நோட்டுகளை யாரும் அள்ளிச் சென்றுவிடாமல் தடுத்தனர். காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டன. இதன்பிறகு பைகுந்த நாத் சாரங்கியின் வீட்டில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டின் அலமாரிகளில் கட்டுகட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த வீட்டில் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல ஒடிசாவின் அனுகோள் நகரில் உள்ள பைகுந்தநாத் சாரங்கியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் இருந்து ரூ.1.21 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இரு வீடுகளில் இருந்தும் மொத்தம் ரூ.2.51 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

இவை தவிர பங்குச் சந்தைகள், மியூச்சுவல் பண்ட் பங்குகளில் ரூ.2.7 கோடியை சாரங்கி முதலீடு செய்திருக்கிறார். முதல்கட்ட விசாரணையில் அவரது வங்கிக் கணக்குகளில் ரூ.1.5 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் புவனேஸ்வர் உட்பட 7 இடங்களில் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றின் மதிப்பு குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.

சாரங்கியின் மனைவியின் பெயரில் பல்வேறு வங்கிகளில் லாக்கர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. வங்கி அதிகாரிகள் உதவியுடன் அந்த லாக்கர்கள் இன்று திறக்கப்பட உள்ளன. அவற்றில் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சாரங்கியின் வீட்டில் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் அந்த பணத்தை எண்ணும் வீடியோவை ஒடிசா லஞ்ச ஒழிப்பு போலீஸார் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x