Last Updated : 29 May, 2025 03:35 PM

6  

Published : 29 May 2025 03:35 PM
Last Updated : 29 May 2025 03:35 PM

போரை தடுத்து நிறுத்தியதாக ட்ரம்ப் 8 முறை கூறிவிட்டார்; ஆனால், பிரதமர் மோடி? - காங். கேள்வி

புதுடெல்லி: “வணிகத்தைப் பயன்படுத்தி இந்தியா - பாகிஸ்தான் போரை தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 11 நாட்களில் 8 முறை கூறிவிட்டார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி முற்றிலும் மவுனமாக இருக்கிறார்” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், "கடந்த 11 நாட்களில் அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளில் போர் நிறுத்தம் தன்னால் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 8 முறை கூறியுள்ளார். மேலும், இதற்காக வரிகளைப் பயன்படுத்தியுள்ளேன் என்றும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்தினால் சர்வதேச வர்த்தகம் அதிகரிக்கும் என்று இரு நாடுகளிடமும் கூறியுள்ளேன் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆனால், நமது வெளியுறவு அமைச்சர் இது குறித்து மவுனமாக இருக்கிறார், நமது பிரதமர் முற்றிலும் மவுனமாக இருக்கிறார். இந்தியாவையும் பாகிஸ்தானையும் நான் ஒரே படகில் ஏற்றிவிட்டேன் என்று ட்ரம்ப் தெளிவாகக் கூறியுள்ளார். பாகிஸ்தானின் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதாரம் 10 மடங்கு அதிகரித்துள்ளது, ஆனால் இரண்டும் ஒரே படகில் ஏறுவது எப்படி நடக்கும்?

பொருளாதாரக் கொள்கைகள் குறித்த விமர்சன விவாதங்களை விட பாராட்டுகளையே நமது பிரதமர் விரும்புகிறார். அதனால்தான் அவர் இவ்விஷயத்தில் அமைதியாக இருக்கிறார். பிரதமர் எதுவும் சொல்லவில்லை.

தேசிய பிரச்சினைகளை புறக்கணித்துவிட்டு, அவசரநிலையின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதில் பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார். ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அவசரநிலையின் 50வது ஆண்டு நிறைவை நினைவுபடுத்தும் நோக்கில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை அரசு கூட்டலாம் என்று கூறப்படுகிறது.

2014 முதல் நம் நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமலில் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதற்கு அவர் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்த விரும்புகிறார்? இன்றைய கேள்விகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, அவர்கள் அதைப் பற்றிப் பேசுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கையும் நாங்கள் அம்பலப்படுத்துவோம், முழு நாட்டிற்கும் முன்னால் யதார்த்தத்தை வைப்போம். பஹல்காமில் நான்கு பயங்கரவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்டனர். இன்னும் அவர்கள் இங்கும் அங்கும் சுற்றித் திரிகிறார்கள். நமது எம்.பி.க்களும் சுற்றித் திரிகிறார்கள், பயங்கரவாதிகளும் சுற்றித் திரிகிறார்கள். ஆனால், காங்கிரஸ் முன்வைக்கும் கேள்விகளுக்கு ஆட்சியாளர்கள் பதிலளிக்கவில்லை.

பாஜக காங்கிரஸ் கட்சியை மட்டுமே குறிவைக்கிறது. அவர்களின் தாக்குதல் பயங்கரவாதிகள் மீது இருக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு நாளும் ஏவப்படும் ஏவுகணைகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஏவப்படுகின்றன.

அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்றும், பிரதமர் அதற்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் நாங்கள் கோரினோம். இரண்டு முறை அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், அது ஒரு சம்பிரதாயமாகவே நடந்து முடிந்தது. பாதுகாப்பு அமைச்சர் அதற்கு தலைமை தாங்கினார். அதில் இருந்து எதுவும் வெளிவரவில்லை; எந்த விவாதமும் நடக்கவில்லை.

நாங்கள் கேட்ட ஆக்கப்பூர்வமான, தீவிரமான, உணர்ச்சி பூர்வமான கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. மே 10 அன்று, கார்கேயும் ராகுல் காந்தியும் பிரதமருக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுமாறு கேட்டு கடிதம் எழுதினர்.

பயங்கரவாத பிரச்சினை தொடர்பாக, 1994 பிப்ரவரி 22 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தைப் போல் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக அந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது.

கடந்த 30 ஆண்டுகளில், இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகளாக மாறிவிட்டன, அதற்கும் மேலாக, பாகிஸ்தானில் சீனாவின் பங்கு ஆழமாகிவிட்டது; இது நமக்கு ஒரு சவாலாகவும் உள்ளது. எனவே இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். மேலும் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும், இதனால் உலகிற்கு ஒரு கூட்டுத் தீர்மானத்தின் செய்தி வழங்கப்படும். ஆனால், பிரதமர் மோடி இது குறித்து அமைதியாக இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x