Published : 18 May 2025 02:10 PM
Last Updated : 18 May 2025 02:10 PM
திருவனந்தபுரம்: “காங்கிரஸுக்குள் இருக்கும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லில் இடம்பிடிக்க சசி தரூர் முயற்சி செய்கிறார்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு யுத்தத்தை பாஜக அரசியல் ஆதாய வேட்டையாக பயன்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் பாஜக ஸ்லீப்பிங் செல் இருப்பதாக ராகுல் காந்தி சொல்வது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. காங்கிரஸுக்குள் இருக்கும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லில் இடம்பிடிக்க சசி தரூர் முயற்சி செய்கிறார்.பாஜகவுக்கு ஒவ்வொரு நகர்வையும் அரசியல் ஆதாயத்துக்காக எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துள்ளது.” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதாரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்கர் பிரசாத், சசிதரூர், கனிமொழி உட்பட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுக்களை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவினர் பிரிட்டன், வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் நிலை குறித்து விளக்க உள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு தஞ்சம் அளிப்பது, நிதிஉதவி வழங்குவது, எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு உதவி செய்வது என தொடர்ந்து பல ஆண்டுகளாகவே தீவிரவாதத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டு வருவது குறித்து உலக நாடுகளிடம் ஆதாரங்களுடன் விளக்க மத்திய அரசு அமைத்துள்ள இந்தக் குழுக்களுக்கு ரவிசங்கர் பிரசாத், வைஜெ யந்த் பாண்டா (பாஜக), சசி தரூர் (காங்கிரஸ்), கனிமொழி (திமுக), சஞ்சய் குமார் ஜா (ஐஜத), சுப்ரியா சுலே (என்சிபி - சரத்பவார்), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகிய 7 எம்.பி.க்களும் அந்த குழுக்களுக்கு தலைமை வகிப்பார்கள்.
ஒவ்வொரு குழுவிலும் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல், ஐஜத, என்சிபி (சரத் பவார்), பிஜு ஜனதா தளம், சிவசேனா (உத்தவ்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த 5 முதல் 8 எம்.பி.க்கள் இடம்பெறுவார்கள். வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் இக்குழுவில் இடம்பெறுவார். இந்த குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இருப்பார்.
இந்தக் குழுவில் சசி தரூர் இடம்பெற்றதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கேரள சிபிஐ செயலர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT