Published : 15 May 2025 02:01 PM
Last Updated : 15 May 2025 02:01 PM
பாட்னா: தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு எனும் சுவரை உடைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பிஹாரின் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் மாணவர் விடுதியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, "உங்களைச் சந்திக்க வேண்டும், உங்கள் குறைகளைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வர முடிவெடுத்தேன். ஆனால், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அரசு, நான் இங்கு வருவதையும் உங்கள் முன் பேசுவதையும் தடுக்க முனைந்தது.
அச்சம் காரணமாக ஜேடியு-பாஜக அரசாங்கம் சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்து, காவல்துறை மூலம் தடுத்தது. பிஹாரில் தலித் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவது குற்றமா? பிஹாரில் மாணவர்களுக்காக நீதி கேட்டு குரல் கொடுப்பது குற்றமா?
உங்களைப் போன்ற மாணவர்களின் ஆதரவு எனக்கு இருப்பதால் என்னை தடுத்து நிறுத்துவதில் அவர்கள் தோல்வியடைந்தனர். நாங்கள் இங்கு வருவதை இன்று அவர்களால் தடுக்க முடியாதது போல, எதிர்காலத்திலும் அவர்களால் எங்களைத் தடுக்க முடியாது.
இந்த சர்வாதிகார அரசாங்கம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நமது குரலை அடக்க முடியாது. எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் மாணவர்களுடன் நிற்கிறோம், தொடர்ந்து அவர்களின் குரலை உயர்த்துவோம். மாணவர்களுக்கு நீதி கிடைக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அநீதி தோற்கடிக்கப்பட வேண்டும், நீதி வெல்லும்.
கல்விக்காக அரசாங்கம் பணத்தை செலவிட வேண்டும். 50% இடஒதுக்கீடு என்ற உச்ச வரம்பை உடைக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு இருக்க வேண்டும்.
நாட்டில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 24 மணி நேரமும் அநீதியை எதிர்கொள்கின்றனர். பாகுபாடு காட்டப்பட்டு கல்வி முறையிலிருந்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள்.
எனவேதான், சாதிவாரி கணக்கெடுப்பு முறையான முறையில் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது. மேலும், தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், நரேந்திர மோடியும், பிஹார் அரசாங்கமும் இந்தச் சட்டத்தை அமல்படுத்தவில்லை, எனவே நாங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அதைச் செய்து காண்பிப்போம். தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாவிட்டால், அடுத்த கட்ட போராட்டத்துக்கு நாங்கள் தயாராவோம். தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இடஒதுக்கீடு நீட்டிக்கப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்.
உங்கள்(மாணவர்கள்) கவனத்திலிருந்து நீங்கள் திசைதிருப்பப்படாமல், உங்கள் உரிமைகளைப் பெறுவதை நான் உறுதி செய்வேன். நீங்கள் அனைவரும் உங்கள் பலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் கேட்டேன். பொதுமக்களின் அழுத்தம் மற்றும் பயம் காரணமாக, சாதி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உண்மை என்னவென்றால் அவர் சாதிவாரி கணக்கெடுப்பையும், அரசியலமைப்பையும் எதிர்க்கிறார். இந்த அரசாங்கம் உங்களைப் பற்றி அல்ல, அதானி மற்றும் அம்பானியைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறது” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT