Published : 15 May 2025 01:14 PM
Last Updated : 15 May 2025 01:14 PM
ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றதை அடுத்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஸ்ரீநகருக்குச் சென்றார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக ஸ்ரீநகர் சென்ற ராஜ்நாத் சிங், ஸ்ரீநகரின் பதாமி பாக் கண்டோன்மென்ட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜம்மு & காஷ்மீர் பகுதியில் வீசப்பட்ட பாகிஸ்தான் குண்டுகளை அமைச்சர் ஆய்வு செய்தார். சில சிதைவுகளையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சலான வீரர்களின் உச்சபட்ச தியாகத்துக்கு முதலில் நான் தலைவணங்க விரும்புகிறேன். அவர்களின் நினைவுகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.
பஹல்காமில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். காயமடைந்த வீரர்களின் துணிச்சலுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். மேலும், அவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
இதுபோன்ற பாதகமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் உங்களுடன் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஆபரேஷன் சிந்தூரின் போது நீங்கள் அனைவரும் செய்தவற்றிற்காக முழு தேசமும் பெருமை கொள்கிறது. உங்கள் பாதுகாப்பு அமைச்சராக இருப்பதற்கு முன்பு, நான் ஒரு இந்திய குடிமகன். பாதுகாப்பு அமைச்சராக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு இந்திய குடிமகனாக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நான் இங்கு ஒரு தபால்காரராக உங்கள் மத்தியில் வந்து நாட்டு மக்களின் செய்தியைக் கொண்டு வந்துள்ளேன். அவர்களின் செய்தி 'நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி பெருமைப்படுகிறோம்' என்பதாகும். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ஒரு நடவடிக்கையின் பெயர் மட்டுமல்ல, அது எங்கள் உறுதிப்பாடு. இது போன்ற ஒரு உறுதிப்பாட்டின் மூலம் இந்தியா பாதுகாப்பை மட்டுமல்ல, தேவைப்படும்போது வலுவான முடிவுகளையும் நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதைக் காட்டியது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். எதிரிகளை அழித்த அந்த சக்தியை உணர நான் இங்கே இருக்கிறேன். எல்லையில் இருந்த பாகிஸ்தானிய பயங்கரவாத முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகளை நீங்கள் அழித்த விதத்தை, எதிரிகளால் ஒருபோதும் மறக்க முடியாது என்று நினைக்கிறேன்.
இவ்வளவு பொறுப்பற்ற மற்றும் முரட்டுத்தனமான நாட்டின் கைகளில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்று நான் முழு உலகத்தையும் கேட்கிறேன். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்தார். முன்னதாக, ஸ்ரீநகருக்கு வருகை தந்த ராஜ்நாத் சிங்கை, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வரவேற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT