Published : 15 May 2025 06:40 AM
Last Updated : 15 May 2025 06:40 AM
புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கு உதவ உளவாளிகளாக செயல்படுபவர்களை ‘ஸ்லீப்பர் செல்கள்’ என்கின்றனர். இவர்கள் கிராமம், நகரங்களில் சாதாரண பொதுமக்கள் போல் ஊடுருவி வாழ்கின்றனர். இவர்களில் படிப்பறிவு இல்லாதவர்கள் முதல் அனைத்து வகைப் பிரிவினரும் உள்ளனர்.
இந்த ஸ்லீப்பர் செல்கள் மூலம் தீவிரவாதிகள் பல்வேறு உதவிகளை பெறுகின்றனர். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் மாநிலம் முழுவதும் ஊடுருவி இருந்த 142 ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடித்து மாநில அரசு ஒழித்துள்ளது.
இவர்கள் உருவாக்கிய போலி இணையதளங்கள் மற்றும் அறக்கட்டளைகள், அவற்றின் நிதி, மத தீவிரவாதம், போலி ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு ஊடுருவல் போன்றவற்றை உ.பி. காவல் துறை கண்டுபிடித்து முடக்கியுள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 2017 முதல் 8 ஆண்டுகளில் ஸ்லீப்பர் செல்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதால், உத்தர பிரதேசத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த 8 ஆண்டுகளில் உ.பி.யின் பிரபல கிரிமினல்கள் 230 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. 142 ஸ்லீப்பர் செல்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர். இந்த ஸ்லீப்பர் செல்களில் ஒருவராக இருந்த தீவிரவாதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 131 செயலிகள் இன்டெல் நிறுவனத்தின் உதவியுடன் முடக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் 11 வலையமைப்புகளும் முறியடிக்கப்பட்டுள்ளன. உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் 2017-ம் ஆண்டு பதவியேற்றதில் இருந்து மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல்கள் இல்லை என்ற நிலை உருவாகி விட்டதாகத் அரசு தெரிவித்துள்ளது. ஸ்லீப்பர் செல்களை ஒடுக்குவதில் உ.பி.யின் ஏடிஎஸ் படை 8 ஆண்டுகளாக முன்னிலை வகிக்கிறது.
இதன் உதவியால் இதுவரை ஐஎஸ்ஐஎஸ், ஏகியூஐஎஸ், ஜேஎம்பி ஏபிடி, எல்இடி, ஜெஎம் எச்எம், சிமி, நக்சல்கள், பிஎப்ஐ மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதிகள் சிக்கியுள்ளனர். இவர்களில் கள்ளநோட்டுகளை வைத்திருந்த 41 பேரும் கூட கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் உ.பி.யில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ரோஹிங்கியா மற்றும் வங்கதேச நாட்டினர் 173 பேர் கைது செய்யப்பட்டனர். உ.பி. அரசு தொடர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT