Published : 14 May 2025 06:49 PM
Last Updated : 14 May 2025 06:49 PM

“புதிய இந்தியாவின் ‘பதிலடி’ மொழி” - தேசியக் கொடி யாத்திரையில் உத்தராகண்ட் முதல்வர் பெருமிதம்

டேராடூன்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் தேசியக் கொடி யாத்திரை (மூவர்ண சவுர்ய சம்மான் யாத்திரை) பிரம்மாண்டமாக நடைபெற்றது. உத்தராகண்டின் சித்பாக்கின் சவுர்ய ஸ்தலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை இந்த யாத்திரை நடந்தது.

ஆபரேஷன் சிந்தூரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த யாத்திரையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், பெண்கள் பங்கேற்று கைகளில் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றனர். இந்த நிகழ்வின்போது, உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு சவுர்ய ஸ்தலத்தில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்பு முதல்வர் தாமி கூறும்போது, “பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா முழு திறன் கொண்டுள்ளது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சல் வெளிப்பட்டதோடு மட்டும் இல்லாமல், பயங்கரவாதம் மற்றும் அதனை ஆதரிப்பவர்களுக்கும் ஒரு தெளிவான செய்தியையும் உணர்த்தியுள்ளது.

அதாவது, புதிய இந்தியாவானது ஒவ்வொரு பயங்கரவாத செயல்களுக்கும் அதன் சொந்த மொழியிலேயே பதிலளிக்கும் என்பதே அது. ஒவ்வொரு பயங்கரவாத செயலுக்கும் பதிலடி கொடுக்கும் திறன் கொண்டுள்ள இந்தியாவின் எல்லைகள், மேம்பட்ட அதன் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் பாதுகாக்கப்படுகின்றன.

உத்தராகண்ட் துணிச்சல் மிக்கவர்களின் பூமி. இங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் தேச சேவையுடன் தொடர்புடையவை. நமது பாதுகாப்பு படைகளின் ஒழுக்கம், துணிச்சல், தியாகத்திலிருந்து மாநில இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும். அதேபோல் ஆபரேஷன் சிந்தூரின் வரலாற்று வெற்றியை கொண்டாடும் வகையில் மூவர்ண சவுர்ய சம்மான் யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்” என்று முதல்வர் தாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x