Last Updated : 14 May, 2025 11:53 AM

1  

Published : 14 May 2025 11:53 AM
Last Updated : 14 May 2025 11:53 AM

'அன்றும், இன்றும், என்றும் அருணாச்சல் எங்களுடையதே' - இந்தியா திட்டவட்டம்

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பெயரை மாற்றினாலும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை சீனாவால் மாற்ற முடியாது என்று கண்டனத்தைக் காட்டமாக பதிவு செய்துள்ளது இந்தியா.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அருணாச்சாலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கிறது. இதில் சீனாவின் முயற்சிகள் எல்லாமே வீணானவை, அபத்தமானவை. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை மாற்ற சீனா முயற்சிக்கிறது. இத்தகைய முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இதுபோன்ற பெயர் மாற்ற முயற்சிகளால் அருணாச்சலப் பிரதேசம் அன்றும், இன்றும், என்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதையும், இந்தியாவிலிருந்து பிரிக்கவே முடியாத பகுதி என்பதையும் மாற்றிவிட முடியாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமை கொண்டாடும் சீனா: அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தை ஜங்னன் எனக் குறிப்பிடுகிறது.

அந்தவகையில் ஏற்கனவே, இதுபோன்று அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றி இருக்கிறது. 2017ல் 6 இடங்களின் பெயர்களையும், 2021ல் 15 இடங்களின் பெயர்களையும் சீனா மாற்றியது.

அதேபோல் 11 இடங்களின் பெயர்களை கடந்த ஏப்ரல் 2023-ல் சீன உள்துறை அமைச்சகம் மாற்றியது. அதில், அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகரின் அருகில் உள்ள ஒரு நகரின் பெயரையும் சீனா மாற்றியது. 5 மலை முகடுகள், 2 புகழ்பெற்ற பகுதிகள், 2 நிலப் பகுதிகள், 2 ஆறுகள் ஆகிய 11 இடங்களின் பெயர்களை சீனா பெயர் மாற்றியது.

இந்த 11 பகுதிகளும் நமது நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ், நமது நிர்வாகத்தின் கீழ் இருப்பவை. இருந்தும் அவற்றை தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின் பெயர்களை மாற்றுவதுபோல் சீனா பெயர் மாற்றம் செய்தது.

இப்போது மீண்டும் பெயர் மாற்ற முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x