Published : 14 May 2025 07:25 AM
Last Updated : 14 May 2025 07:25 AM

இந்தியாவை விட்டு செல்லமாட்டேன்: தாய் வீடு என ரஷ்ய பெண் உருக்கம்

போலினா அக்ரவால்

புதுடெல்லி: எல்லையில் பாகிஸ்தானுடன் போர்ப்பதற்றம் இருந்தபோதிலும் இந்தியாவை விட்டு செல்லமாட்டேன் என்று இந்தியாவில் வசிக்கும் ரஷ்யாவை சேர்ந்த பெண் உருக்கமாக பேசியுள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் போலினா அக்ரவால். நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியுள்ளார். அவர் தற்போு உத்தராகண்ட் மாநிலம் குர்கானில் வசித்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியையும், ராணுவ வீரர்களையும் அவர் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகியுள்ளது.

வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது: இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்களாக சண்டை நடந்தபோது, ரஷ்யாவிலுள்ள எனது பாட்டி ரஷ்யாவுக்கு, தாய்நாட்டுக்கு வந்துவிடுமாறு கூறினார். எது எனது தாய்வீடு? இதுதான் என்னுடைய வீடு. நான் இங்குதான் இருப்பேன் என்று அவரிடம் தெரிவித்துவிட்டேன்.

இந்திய ராணுவ வீரர்கள் இரவு பகலாக எல்லையில் காத்து நிற்கின்றனர். தேசத்துக்காக தங்களது உயிரை அர்ப்பணித்த ராணுவ வீரர்களுக்கு எனது வணக்கம். அவர்கள் எல்லையில் இரவு, பகலாக காவல் காப்பதால்தான், நாட்டு மக்கள் இங்கு இரவு நேரத்தில் நிம்மதியாக உறங்கமுடிகிறது.

ரஷ்ய நாடு கொடுத்த மிகவும நவீனமான ஆயுதங்கள், ராணுவப் பாதுகாப்புச் சாதனங்களை இந்தியா வைத்துள்ளது. எதிரி நாட்டிலிருந்து பறந்து வரும் ட்ரோன்கள், ஜெட் விமானங்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட எதையும் சமாளிக்கும் திறனை ராணுவம் பெற்றுள்ளது.

பதற்றம் ஏற்பட்டபோது இந்திய ராணுவம் தயாராக இருந்ததைப் பாராட்டவேண்டும். சுயநலமில்லாமல் நாட்டுக்காகப் போரிடும் ராணுவ வீரர்கள் நாம் பாராட்டவேண்டும். இதற்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் துணிச்சலான முடிவெடுத்த பிரதமர் மோடியையும் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

சமூக வலைதளத்தில் அவரது வீடியோவை 1,22,000-த்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x