Published : 14 May 2025 06:37 AM
Last Updated : 14 May 2025 06:37 AM
புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை அடுத்த 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு கெடு விதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவப் படைகள் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.
இதைத் தொடர்ந்து இந்தியா மீது பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடி தரும்விதமாக இந்திய பாதுகாப்புப் படையும் தாக்குதலைத் தொடர்ந்தது. 4 நாட்கள் நடந்த போருக்குப் பின்னர் போரை நிறுத்துவதற்கு 2 நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரி ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போரின்போது, அந்த அதிகாரி தான் பணியாற்றி வரும் பணிக்கு முரணான வகையில் செயல்பட்டு வந்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த அதிகாரியை அடுத்த 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கெடு
விதித்துள்ளது. இதுதொடர்பான உத்தரவு பாகிஸ்தான் தூதரக அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரி யார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT