Published : 14 May 2025 06:21 AM
Last Updated : 14 May 2025 06:21 AM
புதுடெல்லி: உத்தரபிரதேசம் சம்பலில் பல்வேறு காப்பீடுகளின் பெயரில் ரூ.200 கோடி வரை மோசடி நடந்துள்ளது. காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 18 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உ.பி.யின் சம்பலில் கடந்த வருடம் நவம்பர் 15-ல் வழக்கமான வாகன சோதனையில் காவல்துறை ஈடுபட்டிருந்தது. அப்போது நிற்காமல் சென்ற ஒரு வாகனத்தை துரத்திப் பிடித்ததில் வாராணசியை சேர்ந்த ஓம்காரேஷ்வர் மிஸ்ரா (40) சிக்கினார். அவரிடம் இருந்த ரூ.11 லட்சம் ரொக்கம் மற்றும் 29 ஏடிஎம் அட்டைகள் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர் பல்வேறு காப்பீடு நிறுவனங்களில் போலி காப்பீடுகள் செய்து மோசடி செய்து வருவது தெரியவந்தது.
எனவே, இந்த வழக்கை சம்பல் டிஐஜியான தமிழர் ஜி.முனிராஜ், தனது தலைமையில் ஒரு படையை அமைத்து தீர விசாரித்துள்ளார்.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் அவர் கூறும்போது, “புற்று நோய் உள்ளிட்ட தீவிர நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு போலி மருத்துவச் சான்றிதழ் பெற்று அவர்கள் பெயரில் காப்பீடு செய்துள்ளனர். அவர்களின் குடும்பத்தாரை இந்த மோசடியில் பங்குதாரராக்கியுள்ளனர். நோயாளி இறந்த பிறகு கிடைக்கும் தொகையில் சில ஆயிரங்களை மட்டும் அவர்களுக்கு கொடுத்துள்ளனர்.
இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக காப்பீடு செய்துவிட்டு, பிறகு காலம் கடந்து விபத்தில் இறந்ததாக இறப்புச் சான்றிதழ் அளித்தும் மோசடி செய்துள்ளனர். சில காப்பீடு நிறுவனங்களுக்கு சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து அவை புகார் அளித்துள்ளன.
இந்த மோசடியில் 2 மாற்றுத்திறனாளிகள் உள்பட 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்திலும் சுமார் ரூ.200 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. 12 மாநில கும்பல் சம்மந்தப்பட்ட இந்த வழக்கில் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 18 பேர் கைது செய்யப்பட்டு, இருவர் தேடப்பட்டு வருகின்றனர்" என்றார்.
இந்த நூதன மோசடியில் முதலில் சிக்கிய ஓம்காரேஷ்வர் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக உள்ளார்.
இவர் பதாயூ மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி தரியாப் (38) என்பவரை கடந்த ஜுலை 31-ல் கொலை செய்துள்ளார். அதே மாவட்டத்தில் சஞ்சய் என்ற மற்றொரு மாற்றுத் திறனாளியை கடந்த ஜுன் 20, 2024-ல் அவரது தம்பி நவீன் மூலம் கொலை செய்துள்ளனர்.
மூன்றாவதாக ரூ.2.7 கோடி காப்பீடு செய்யப்பட்டிருந்த டெல்லியின் அமான் (20) என்பவரை மாற்றாந்தாய் உதவியுடன் நவம்பர் 15, 2023-ல் கொலை செய்துள்ளனர். பிறகு அவரது உடலை சாலையில் வீசி வாகனத்தை ஏற்றியுள்ளனர். இதே பாணியில் நான்காவதாக, ஜுலை 29, 2022-ல் தனாரி என்பவரும் கொலையாகி உள்ளார்.
பிஎம்ஜேஏஒய் மருத்துவக் காப்பீடு திட்டத்திலும் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த புலந்த்ஷெஹர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கைதாகி உள்ளனர். யெஸ் வங்கியின் இரண்டு அலுவலர்களும் சிக்கியுள்ளனர். பல மாநில கும்பல் தொடர்புடைய இந்த மோசடி வழக்கை அமலாக்கத்துறை எடுத்து விசாரிக்கும் பணியில் இறங்கி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT