Published : 14 May 2025 05:45 AM
Last Updated : 14 May 2025 05:45 AM
புதுடெல்லி: பாகிஸ்தானுடனான பிரச்சினையை பிரதமர் மோடி மிகத் திறமையாக கையாண்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் புகழாரம் சூட்டினார்.
இதுதொடர்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு சசி தரூர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடியை இந்தியா கொடுத்தது. அதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலையும் இந்திய திறமையாகச் சமாளித்து தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாடினார். நம் நாட்டு மக்களுக்கு இதுபோன்ற உரைகள் அடிக்கடி தேவைதான். அடிக்கடி நாட்டு மக்களிடையே இதுபோன்று பேசுவது பிரதமரின் கடமை.
மன் கி பாத் என்ற பெயரில் மாதம்தோறும் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில் பேசும் விஷயங்கள் வேறு. ஆனால், தற்போது நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றிய விஷயம் வேறு.
தொலைக்காட்சியில் தோன்றி, மனதில் உள்ள பெரிய பிரச்சினைகளை பேசுவதும் எப்போதும் முக்கியமானதாக நான் நினைக்கிறேன். அது போராக இருந்தாலும் சரி. கோவிட் போன்ற பிரச்சினைகளாக இருந்தாலும் சரி. அவர் அதுபோன்ற உரையைப் பேசவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறேன். எனவே, அதை அவர் செய்ததில் நான் மகிழ்கிறேன்.
பாகிஸ்தானுடனான பிரச்சினையை பிரதமர் மோடி திறமையாகக் கையாண்டார். ஆபரேஷன் சிந்தூர் என்று தாக்குதலுக்குப் பெயர் வைத்தது முதல் இறுதி வரை பிரச்சினையை அவர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. இதற்கான முழு மதிப்பெண்களையும் நான் அவருக்குக் கொடுக்கிறேன்.
இதுபோன்ற தாக்குதலை பாகிஸ்தானுக்குக் கொடுத்து நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை தெளிவாக பிரதமர் மோடி தெரிவித்துவிட்டார். இதனிடையே நாங்கள் எதையுமே செய்யவில்லை என்று பாகிஸ்தான் மறுத்து வருகிறது. நாங்கள் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று பாகிஸ்தான் கேட்கலாம்.
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் பிடிபடும்வரை ஆதாரம் எங்கே இருந்தது? மும்பை தாக்குதலில் கசாப் உயிருடன் பிடிபடும் வரை ஆதாரம் எங்கே இருந்தது? இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT