Published : 13 May 2025 05:44 PM
Last Updated : 13 May 2025 05:44 PM
திருவனந்தபுரம்: கேரளாவின் நந்தன்கோட்டில் 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோர், சகோதரி உட்பட குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவனந்தபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் 4-ன் நீதிபதி கே.விஷ்ணு இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார். வழக்கு விசாரணையின் போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர், குற்றவாளியான கேடல் ஜேன்சன் ராஜாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதாடினார். ஆனால், நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திலீப் சத்யன் கூறுகையில், "நான்கு பேரைக் கொலை செய்த குற்றவாளி கேடலுக்கு ஒவ்வொரு கொலைக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், குற்றவாளிக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 436-ன் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரிவு 201-ன் கீழ் 5 ஆண்டுகள் தண்டனையும் வழங்கியுள்ளது. இந்த 12 ஆண்டுகள் தண்டனை முடிந்த பின்பு ஆயுள் தண்டனை தொடங்கும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது" எனத் தெரிவித்தார். அதேபோல், கேடலுக்கு ரூ.15 லட்சம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை அவரின் மாமாவுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்ன நடந்தது? - கடந்த 2017-ம் ஆண்டு ஏப்.9-ம் தேதி பேராசிரியர் ஏ.ராஜா தங்கம், அவரது மனைவி டாக்டர் ஜேன் பத்மா, இவர்களது மகள் கரோலின் மற்றும் இவர்களின் உறவினர் லலிதா ஆகிய நான்கு பேரும், அவர்களின் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. கொலையானவர்களின் வீடு, கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு அருகில் அமைந்திருக்கும் பெய்னேஸ் வளாகத்தில் அமைந்துள்ளது. போலீஸாரின் கூற்றுப்படி, கேடல் தனது பெற்றோர், சகோதரி மற்றும் உறவினரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
விசாரணையின்போது, தனக்கு மந்திரதந்திரங்களில் நம்பிக்கை இருப்பதாகவும், அந்த நம்பிக்கைகள் இந்தக் கொலைகளைச் செய்ய தூண்டியது என்றும் தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்டவரின் இந்தக் கூற்று தண்டனையில் இருந்து தப்பிக்கும் ஒரு வழிமுறை என்று அரசுத் தரப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT