Last Updated : 13 May, 2025 04:37 PM

1  

Published : 13 May 2025 04:37 PM
Last Updated : 13 May 2025 04:37 PM

அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க இந்தியா முடிவு - ட்ரம்ப்புக்கு மோடி செக்?

கோப்புப் படம்

புதுடெல்லி: அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. உலக வர்த்தக அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் இதனை இந்தியா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா, இந்தியா, கனடா உள்பட பல்வேறு நாடுகள் அதிக இறக்குமதியை விதிப்பதாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை அமல்படுத்தப் போவதாகவும் ட்ரம்ப் கூறினார்.

அதன்படி, சீனா, இந்தியா, கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் என பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. எனினும், அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள நாடுகள் முன்வந்ததை அடுத்து, வரி வகிதம் சராசரியாக 10% ஆக குறைக்கப்பட்டது.

அதேநேரத்தில், சீனாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிக்கு அந்நாடு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வரி விகிதத்தை மேலும் அதிகரித்தது அமெரிக்கா. பதிலுக்கு சீனாவும், அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்தது. வரியை அதிகரிப்பதில் நிகழ்ந்த போட்டி காரணமாக, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா 145% வரை உயர்த்தியது. அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை சீனா 125% வரை உயர்த்தியது.

இந்நிலையில், அமெரிக்கா - சீனா இடையே சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளும் வரியை குறைக்க ஒப்புக்கொண்டன. சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10% ஆக குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கான பேச்சுவார்த்தைகளில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இரு நாடுகளுக்கு இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா சமர்ப்பித்த மே 12ம் தேதியிட்ட ஆவணத்தில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் சில பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனங்கள் ப்ளூம்பெர்க் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன.

“அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்தி வைப்பது அல்லது அவற்றின் மீதான வரிகளை அதிகரிப்பது எனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேநேரத்தில், எந்த வகையான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்பது பற்றி அதில் கூறப்படவில்லை. இந்த நடவடிக்கை ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தியாவின் முதல் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x