Published : 13 May 2025 06:59 AM
Last Updated : 13 May 2025 06:59 AM
புதுடெல்லி: ‘‘இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, 10 சேட்டிலைட்கள் 24 மணி நேரமும் பாகிஸ்தானை கண்காணித்து வருகின்றன’’ என்று இந்திய விண்வெளி ஆய்வுத் துறை தலைவர் வி.நாராயணன் உறுதியாக கூறினார். திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆய்வுத் துறை (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் பங்கேற்றார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், இந்திய நிலப்பரப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இஸ்ரோவின் 10 சேட்டிலைட்கள் பாகிஸ்தானை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றன.
நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமானால், சேட்டிலைட் மூலம் தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்படி இந்தியாவின் 7,000 கி.மீ. தூரம் கொண்ட கடலோராப் பகுதிகளை இஸ்ரோ சேட்டிலைட்கள் கண்காணித்து வருகின்றன. சேட்டிலைட்கள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்கள் இல்லையென்றால், நம்மால் பல முன்னேற்றங்களை காண முடியாது.
தற்போதைய நிலையில் 127 சேட்டிலைட்களை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. இவற்றில் தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களின் சேட்டிலைட்களும் அடங்கும். மேலும், அவற்றில் 22 சேட்டிலைட்கள் பூமிக்கு மிக குறைந்த உயரத்தில் சுற்றி வருகின்றன. 29 சேட்டிலைட்கள் பூமியை துல்லியமாக படம் பிடிக்கும் சேட்டிலைட்கள். இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதேபோல், கார்டோசேட், ரிசேட், எமிசேட், மைக்ரோசேட் உட்பட 12-க்கும் மேற்பட்ட உளவு சேட்டிலைட்களையும் இந்தியா வைத்துள்ளது. இந்த வகை சேட்டிலைட்கள் பூமியை கண்காணிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை.
சேட்டிலைட் தொழில்நுட்பத்தில் நாம் ஏற்கெனவே மிகவும் பலமாக இருக்கிறோம். அதை இன்னும் மேம்படுத்துவதுதான் தேவை. இந்திய ராணுவம், கப்பல் படை, விமானப் படைகளுக்கு உதவும் வகையில் அந்த வகை சேட்டிலைட்களை மேம்படுத்தி வருகிறோம். அதன்மூலம் எதிரிகளின் நடமாட்டம், எல்லைகளை கண்காணிப்பது, ராணுவ நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் தகவல் அனுப்பி ஒருங்கிணைப்பது போன்ற பணிகளை செய்து வருகிறோம்.
இவ்வாறு இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். வரும் 18-ம் தேதி இஓஎஸ் - 09 (ரிசேட்-1பி) கண்காணிப்பு சேட்டிலைட்டை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சேட்டிலைட் விண்ணில் ஏவப்பட்ட பிறகு இந்தியாவின் பதற்றமான எல்லைப் பகுதிகளை முழுமையாக கண்காணிக்க முடியும் என்று நாராயணன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT