Published : 13 May 2025 06:01 AM
Last Updated : 13 May 2025 06:01 AM
மும்பை: ராணுவ அதிகாரியாக இருந்த எனது தந்தையை தீவிரவாதிகள் கடத்திக் கொலை செய்தனர் என்று பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் நினைவுகூர்ந்தார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவீரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ராணுவத்தின் முப்படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூரை பாராட்டி இன்ஸ்டாகிராமில் நடிகையான நிம்ரத் கவுர் கருத்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தன் தந்தையான ராணுவ மேஜர் புபேந்தர் சிங் தீவிரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்டது குறித்து நிம்ரத் கவுர் முன்பு அளித்த பேட்டி பற்றி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக நிம்ரத் கவுர் கூறியதாவது: இன்ஜீனியராக இருந்த என் தந்தை, ஜம்முவில் இருக்கும் வேரிநாக் பகுதியில் பணியமர்த்தப்பட்டார். அவர் ஒரு இளம் ராணுவ மேஜர். குடும்பத்துடன் வாழ அந்த இடம் சரியான பகுதி இல்லை என்பதால் எனது தந்தை, எங்களை பாட்டியாலாவில் விட்டுவிட்டு காஷ்மீருக்கு சென்றார்.
இதனிடையே, 1994-ம் ஆண்டு ஜனவரி மாதம் நாங்கள் தந்தையை பார்க்க காஷ்மீருக்கு சென்றோம். அப்போது ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் எனது தந்தையை அவர் வேலை செய்யும் இடத்தில் இருந்து கடத்திச் சென்று கொலை செய்துவிட்டனர்.
அந்த சமயத்தில் சில தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என கடத்தியவர்கள் விடுத்த கோரிக்கையை என் அப்பா ஏற்கவில்லை. அவர் இறந்தபோது அவருக்கு 44 வயது தான். என் தந்தையின் உடலுடன் டெல்லிக்கு திரும்பி வந்தோம். டெல்லிக்கு வந்த பிறகே தந்தையின் முகத்தை கடைசியாக பார்த்தேன்.
பயப்பட்டதே இல்லை: விவசாய குடும்பத்தில் பிறந்தவராக எனது தந்தை புபேந்தர் சிங் இருந்தபோதிலும், ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார். கடைசி வரை என் தந்தை யாருக்காகவும் பயப்பட்டதே இல்லை.
எனது தந்தைக்கு அப்படியொரு சம்பவம் நேர்ந்த பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு போகவே கூடாது என்று முடிவு செய்தேன். ஆனால் கேன்ஸ் திரைப்பட விழாவில் நான் நடித்த தி லன்ச் பாக்ஸ் படம் திரையிடப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீருக்கு சென்றேன். என் தந்தை வேலை செய்த பகுதியில் சில நாட்கள் தங்கியிருந்தேன். இவ்வாறு நிம்ரத் கவுர் கூறினார்.
இந்நிலையில், அண்மையில் தனது தந்தையின் 72-வது பிறந்தநாளில் அவர் நினைவாக சிலை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிம்ரத் கவுர். மேலும், தந்தையின் நினைவாக அமைக்கப்பட்ட சிலை அருகே அம்மா, தங்கையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கததில் அவர் வெளியிட்டார்.
43 வயதாகும் நிம்ரத் கவுர், இதுவரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். தற்போு அவர் இந்தித் திரைப்படங்கள், வெப் தொடர்கள், டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
புபேந்தர் சிங், ராணுவத்துக்கு அளித்த சேவையைப் பாராட்டி அவரது குடும்பத்தாருக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் நிலம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், அவரது இறப்புக்குப் பிறகு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான சவுர்யா சக்ரா வீர விருதும் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT