Published : 13 May 2025 05:51 AM
Last Updated : 13 May 2025 05:51 AM

தஹாவூர் ராணா, சோட்டா ராஜன் இருப்பதால் டெல்லி திஹார் சிறைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: தஹாவூர் ராணா, சோட்டா ராஜன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள டெல்லி திஹார் சிறைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள திஹார் சிறை 1958-ம் ஆண்டு திறக்கப்பட்டது. சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இதில் 9 சிறை வளாகங்கள் உள்ளன. இது நாட்டின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதில், மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணா, மும்பை தாதா சோட்டா ராஜன் மற்றும் நீரஜ் பவானா உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறைத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், திஹார் சிறை வளாகத்தில் பல அடுக்கு பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படுவதுடன் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தீவிரவாதிகள் மற்றும் ரவுடி கும்பல் தலைவன் உட்பட தீவிரமான குற்றப் பின்னணி கொண்ட கைதிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றனர். சிறையில் உள்ள கைதிகள் ரகசியமாக தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதை தடுக்க மொபைல் சிக்னல் ஜாமர்கள் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் சிறை ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறை வளாகத்துக்குள் நடமாடும் கைதிகளின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

சிறை வளாகத்தில் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேவு பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்கிடமான நடவடிக்கை பற்றி தகவல் தெரிவிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சிறைப் பாதுகாப்பில் எந்த வெளிப்புறத் தாக்கமும் ஊடுருவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சிறப்புப் பிரிவு மற்றும் பிற புலனாய்வுப் பிரிவுகளுடன் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x