Published : 09 May 2025 01:09 PM
Last Updated : 09 May 2025 01:09 PM
புதுடெல்லி: உத்தராகண்டில் யாத்ரீகர்களுடன் கங்கோத்ரிக்குச் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. இதில் விமானி, ஐந்து யாத்ரீகர்கள் என ஆறு பேர் உயிரிழந்தனர்.
உத்தராகண்டின் டேராடூனில் இருந்து கங்கோத்ரிக்கு வியாழக்கிழமை காலை 6 யாத்ரீகர்களுடன் ஹெலிகாப்டர் கிளம்பத் தயாராக இருந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஹெலிகாப்டர் பறக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வானிலை எச்சரிக்கை அறிவுறுத்தலை விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் காலை 9 மணியளவில் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கனானி கிராமத்துக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளனாது. பின்பு அங்குள்ள பாகீரதி ஆற்றில் அந்த ஹெலிகாப்டர் விழுந்தது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ஆறு யாத்ரீகர்களில் 5 பேர் மற்றும் விமானியும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மும்பையைச் சேர்ந்த விஜய் லட்சுமி ரெட்டி (57), ருச்சி அகர்வால் (56), கலா சந்திரகாந்த் சோனி (61), உத்தரப் பிரதேசத்தின் பரேலியைச் சேர்ந்த ராதா அகர்வால் (79), ஆந்திராவின் அனந்தபூரைச் சேர்ந்த வேதாந்தி பாஸ்கர் (48), மற்றும் விமானி கேப்டன் ராபின் சிங் (60) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
யாத்திரீகர்களில் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார். ஆந்திராவின் அனந்தபூரைச் சேர்ந்த மக்தூர் பாஸ்கர் (51) என அறியப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து உத்தராகண்ட் மாநில அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், “வானிலை மேம்படும் வரை சில மணிநேரம் காத்திருக்க வேண்டும் என்ற தெளிவான அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டன. இருந்த போதிலும் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அந்த ஹெலிகாப்டர் பறந்தது. பெரும்பாலும் ஹெலிகாப்டர்களை முன்பதிவு செய்த யாத்ரீகர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர்.
ஆனால், அதிக வருமானம் ஈட்டுவதற்காக ஒரு நாளில் முடிந்தவரை பல முறை பறக்கவும் தனியார் ஹெலிகாப்டர்கள் விரும்புகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது தனியார் விமான நிறுவனத்தின் பொறுப்பாகும்.” எனத் தெரிவித்தனர்.
உத்தராகண்டில் உள்ள சார்தாம் யாத்திரைக்கான காலம் துவங்கி நடைபெறுகிறது. கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய புனிதத் தலங்களுக்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதுபோல் வரும் யாத்ரீகர்களுக்கு ஹெலிகாப்டர் சேவைகளை வழங்க சில தனியார் விமான நிறுவனங்களை உத்தராகண்ட் மாநில அரசு அனுமதித்துள்ளது.
இதுபோன்ற விபத்துகள் சில நேரங்களில் ஹெலிகாப்டர்களில் ஏற்படும் கோளாறுகள் காரணமாகவும் ஏற்படுகின்றன. எனவே, விபத்துக்கான காரணம் குறித்து உத்தராகண்ட் கர்வால் பிரிவு ஆணையர் விஜய் சங்கர் பாண்டே விசாரணை நடத்துகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT