Published : 09 May 2025 12:47 PM
Last Updated : 09 May 2025 12:47 PM
புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிகழும் மோதலால் அங்கு வாழும் பாம்புகளும் பாதிக்கப்பட்டு அவைகள் இடம்மாறித் தவிக்கின்றன. பாம்புகளை மீட்கும் பணியில் எஸ்ஒஎஸ் எனும் சர்வதேச அமைப்பின் ஜம்மு காஷ்மீர் பிரிவு ஈடுபட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் வாழும் வனவிலங்குகள் எதிர்பாராத துயரங்களை சந்தித்து வருகின்றன. காஷ்மீர் போன்ற உணர்திறன் மிக்க பகுதிகளில், மனித வாழ்விடங்கள் இயற்கையான வாழ்விடங்களுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது முதல் சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான எஸ்ஒஎஸ் வனவிலங்குகளின் மீட்பு பணியில் இறங்கி உள்ளது.
இந்த தொண்டு நிறுவனத்தின் ஜம்மு-காஷ்மீர் பிரிவிடம் உதவி கேட்டு தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன.. இவற்றில் பெரும்பாலனவை எல்லையிலுள்ள குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வருபவை. இப்படி வரும் பல அழைப்புகளுக்கு எஸ்ஒஎஸ் தொடர்ந்து பதிலளித்து வருகிறது.
போர்ச் சூழலால், எல்லைகளில் அதிகரித்து வரும் வாழ்விட இடையூறுகளுக்கு இடையே அங்கு வாழும் பாம்புகளின் வாழ்க்கையும் பாதித்துள்ளது. இடையூறு காரணமாக பாம்புகள் தங்களுக்கான புதிய தங்குமிடம் அல்லது உணவைத் தேடத் துவங்கியுள்ளன. இப்படி வழிமாறிய பாம்புகளை மீட்பதற்கான முதல் அழைப்பு எஸ்ஒஎஸ் ஜம்மு-காஷ்மீர் பிரிவிற்கு பாம்பூரில் இருந்து வந்தது. அங்கு 4.5 அடி நீளமுள்ள எலிப் பாம்பு (Ptyas mucosus) ஒரு காரின் பானட்டில் கிக்கியிருந்தது.
வாகன உரிமையாளர் தனது வாகனத்தில் வெளியேச் செல்லத் தயாரானபோது, அப்பாம்பைக் கண்டார். இதை மீட்க வேண்டி அவர்கள் உடனடியாக வனவிலங்கு எஸ்ஒஎஸ் ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டனர். வனவிலங்கு எஸ்ஒஎஸ் இல் உள்ள ஜம்மு-காஷ்மீர் பிரிவின் தலைவரான ஆலியா மிர், சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து, பாம்பை வெற்றிகரமாக வெளியேற்றினார். இதனால் பாம்பு மற்றும் வாகனத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாத வகையில் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, புட்காமில் இரண்டு தனித்தனி மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் மீட்பில், 5 அடி நீளமுள்ள எலிப்பாம்பு ஒன்று கோழிக்கூட்டின் வலையில் சிக்கி இருந்தது. அந்த பாம்பு, மிகவும் சோர்வடைந்து சுவாசிக்க சிரமப்பட்டது. அதை மீட்க தம்மிடம் இருந்த சிறப்பு கருவிகளை பயன்படுத்திய ஆலியா, வலையை மெதுவாக வெட்டி எடுத்து பாம்பைப் பாதுகாப்பாக விடுவித்தார். சில நாட்களுக்குப் பிறகு அதே கோழிக் கூட்டில் சிக்கிய மற்றொரு எலிப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது .
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் வனவிலங்கு எஸ்ஒஎஸ்-ன் இணைநிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திக் சத்யநாராயண் கூறுகையில், “உணர்திறன் மண்டலங்களில் நகர்ப்புற இருப்பு அதிகரித்து வருகிறது. இதனால், வனவிலங்குகள் பெரும்பாலும் இடம்பெயரவோ அல்லது திசைதிருப்பவோப்படுகின்றன. சமூகப் பாதுகாப்பு மற்றும் விலங்கு நலனை உறுதி செய்வதற்காக விரைவாக செயல்பட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
எஸ்ஒஎஸ் இன் இணை நிறுவனர் மற்றும் செயலாளரான கீதா சேஷமணி குறிப்பிடுகையில்,“மக்கள் பயத்தை விட இரக்கத்தைத் தேர்ந்தெடுக்கும்போது அமைதியான சகவாழ்வு சாத்தியமாகும். எங்கள் ஹெல்ப்லைனுக்கு செய்யப்படும் ஒவ்வொரு அழைப்பும் அந்த திசையின் ஒரு படியாகும். எந்த சூழலில் நாம் வனவிலங்குகளின் மீட்புப் பணிக்கு தயாராக உள்ளோம்.” எனத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் பிரிவின் தலைவர் ஆலியா மிர் கூறுகையில், “காஷ்மீர் போன்ற பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் மனிதர்களும் வனவிலங்குகள் மோதல் அதிகம். விலங்குகள் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் முன் நாம் செயல்பட முயல்கிறோம். இதற்காக, எங்களுக்கு விரைவாக வாய்ப்பளித்த குடியிருப்பாளர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளின் போது மீட்கப்படும் பாம்புகள், மருத்துவக் கண்காணிப்புக்காக வனவிலங்கு எஸ்ஒஎஸ் மீட்பு வசதிக்கு கொண்டு செல்லப்பட்டன, மேலும், அவை நலமாக இருப்பதை உறுதிசெய்த பின், மீண்டும் பொருத்தமான காட்டு வாழ்விடங்களுக்குள் விடப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT