Published : 09 May 2025 08:00 AM
Last Updated : 09 May 2025 08:00 AM

பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் முயற்சிகளை முறியடித்த இந்தியா - விடிய விடிய நடந்தது என்ன?

பாகிஸ்தான் தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்.

புதுடெல்லி: இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்ததன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை இரவும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை.

ஜம்மு விமான நிலையம், பஞ்சாபின் பதன்கோட் விமான நிலையம், ராஜஸ்தானின் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் வியாழக்கிழமை இரவு திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியது.

ஜம்மு எல்லை பகுதியில் வியாழக்கிழமை இரவு அத்துமீறி பறந்த பாகிஸ்தான் விமானப் படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதேபோல பாகிஸ்தான் விமானப் படையின் எப்ஜே-17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. முன்னெச்சரிக்கையாக ஜம்மு மற்றும் பஞ்சாப், ராஜஸ்தான் எல்லை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதிகள் இருளில் மூழ்கின.

ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களை ஒட்டி அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள எல்லையோர இந்திய பகுதிகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் ஏவிய 8 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இந்திய ராணுவம் இடைமறித்து வீழ்த்தியதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே பாகிஸ்தானின் 50 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது இந்திய ராணுவம்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ‘ஜம்மு, பதன்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து வியாழக்கிழமை 8.20 மணி அளவில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் முயற்சியை நடத்தியது. எல்லைப் பகுதியில் இருந்து இந்த முயற்சி நடந்தது. அந்த முயற்சி, நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு (SOP) ஏற்ப முறியடிக்கப்பட்டது. இதில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தயார் நிலையில் உள்ளது’ என்று தெரிவித்தது.

சம்பாவில் 11 மணிக்கு தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இரவு 11 மணி அளவில் வரிசையாக பல ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். அந்த தாக்குதலை இந்திய பாதுகாப்பு படை முறியடித்தது. இந்த தாக்குதலை எல்லையோர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை விடிந்ததும் அங்கு மக்கள் நடமாட்டம் வழக்கம்போல தொடங்கியுள்ளது. இதை களத்தில் இருந்து வரும் தகவல்கள் உறுதி செய்துள்ளன.

ராஜஸ்தானில் அவசர நிலை: ராஜஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப் படை நடுவானில் அழித்தது. மேலும், ஜெய்சல்மர் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தான் விமானி கைது: ராஜஸ்தானின் ஜெய்சல்மர் எல்லை அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் போர் விமானத்தில் இருந்து விமானி வெளியேறி தப்பிச் செல்ல முயன்றார். அவரை இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை இரவு உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாநில காவல் துறை தலைவர், உளவுத்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது ராஜஸ்தானில் சிவப்பு எச்சரிக்கை அவசர நிலையை அமல்படுத்த முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டார். இதன்படி ராஜஸ்தான் முழுவதையும் உஷார் நிலையில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் கவுரவ் அகர்வால் கூறும்போது, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இன்வெர்ட்டர், ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வீடுகளில் மின் விளக்குகளை எரிய செய்யக்கூடாது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

24 விமான நிலையங்கள் மூடல்: பாகிஸ்தான் உடனான மோதல் முற்றிய நிலையில், பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களில் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பூந்தர், கிஷன்கர், சிம்லா, கங்கரா, பட்டிண்டா, ஜெய்சல்மர், ஜோத்பூர், பிகானேர், ஹல்வாரா, பதன்கோட், ஜம்மு, லே, முன்ட்றா, ஜாம்நகர், ஹிராசர் (ராஜ்கோட்), போர்பந்தர், கேஷோத், கண்ட்லா, புஜ் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு மேம்பாடு: நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேம்படுத்தப்பட்ட காரணத்தால் பயணிகள், தங்களது புறப்பாட்டுக்கு குறைந்தது 3 மணி நேரத்துக்கு முன்னதாக விமான நிலையத்துக்கு வருமாறு பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் சமூக வலைதளத்தில் அறிவுறுத்தி உள்ளன.

ஜம்மு விரைந்த உமர் அப்துல்லா: ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு பகுதிக்கு இன்று காலை புறப்பட்டுள்ளார். ‘கள சூழலை அறிய தற்போது ஜம்முவுக்கு விரைகிறேன். நேற்று இரவு ஜம்மு மற்றும் இதர பகுதிகளில் பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல்கள் தோல்வியடைந்தன’ என எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார்.

அமிர்தசரஸ் நிலவரம் என்ன? - பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸையும் வான்வழியாக தாக்க பாகிஸ்தான் முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு நேற்று இரவு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலிலும் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. இந்நிலையில், மக்கள் வீட்டுக்குள் இருக்கவும், ஜன்னல் அருகில் இருக்க வேண்டாம் என்றும், திரைச்சீலைகளை இறக்கி வைக்கவும் அமிர்தசரஸில் உள்ள அரசு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. நமது பாதுகாப்புப் படை பணியில் உள்ளது. நிலைமை சரியானதும் அந்தச் செய்தியை அறிவிக்கிறோம் என அமிர்தசரஸ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெல்லி, ஆக்ரா, அமிர்தசரஸில் உச்சகட்ட பாதுகாப்பு: தலைநகர் டெல்லி மற்றும் அங்கு அமைந்துள்ள இந்தியா கேட் பகுதி, உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹால், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மேற்கு கடலோர பகுதியான மும்பை, சூரத் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் துறைமுகத்தில் உள்ள கப்பல்களின் இயக்கம் குறித்தும் அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் அவசர ஆலோசனை: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்வது குறித்து இதில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதனிடையே, ‘எல்லையில் பதற்றத்தை குறைப்பதா, வேண்டாமா என முடிவு எடுப்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது’ என்று வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x